< Back
தலையங்கம்
கலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்
தலையங்கம்

கலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்

தினத்தந்தி
|
5 Sept 2022 1:56 AM IST

மாணவர்கள் பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து தொழில் கல்லூரிகளிலும், கலைக் கல்லூரிகள் உள்பட அனைத்து உயர்படிப்புகளிலும் சேர ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கல்லூரி கல்விக்கான ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டு 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 மாணவர்களும், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 மாணவிகளும் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து தொழில் கல்லூரிகளிலும், கலைக் கல்லூரிகள் உள்பட அனைத்து உயர்படிப்புகளிலும் சேர ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் "கல்லூரி கனவு நிகழ்ச்சி" இவர்களின் ஆர்வத்துக்கு நல்ல வழிகளைக் காட்டிவிட்டது. குறிப்பாக, அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை, கல்வி உதவி தொகையையும் பெறலாம் என்பது உள்பட அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல், பட்டப்படிப்பு படித்தால்தான் நல்ல வேலைக்கு போகமுடியும், சமுதாயத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும் என்ற எண்ணம் மாணவர்களிடம் இருப்பதால், கல்லூரி கதவுகளைத் தட்டுகிறார்கள். மேலும், பொறியியல் கல்லூரி போல புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனங்கள் கலைக்கல்லூரியிலும் 'கேம்பஸ் இண்டர்வியூ' நடத்தி வேலைக்கு எடுப்பதால், படித்து முடித்தவுடன் வேலைக்குபோக வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய காரணங்களால், தமிழ்நாட்டிலுள்ள 160 அரசு கலைக்கல்லூரிகளிலும், 162 அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளிலும், 623 சுயநிதி கலைக்கல்லூரிகளிலும் இந்த ஆண்டு பட்டப்படிப்புக்கு வெகு திரளாக மாணவர்கள் படையெடுத்துள்ளனர். அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லையென்பதால், இந்த ஆண்டு அங்கு இருக்கும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 225 இடங்களுக்கு 2 லட்சத்து 98 ஆயிரத்து 400 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள் உயர் படிப்புகளில் சேர்ந்தால், அவர்களின் வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் சேர்க்கப்படும் என்ற புதுமைப்பெண் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதால், மாணவிகளில் மட்டும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 279 பேர் அரசு கலைக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இன்று நடக்கும் சரித்திர புகழ் வாய்ந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொள்கிறார். மாணவர் சேர்க்கை முடிந்து, ஏராளமானவர்கள் தினமும் கல்லூரிகளுக்கு வந்து, 'எனக்கு இடம் தாருங்கள்' என்று அலையும் நிலைமை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் எம்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களின் நிலையை அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் காரணமாக, இப்போது அனைத்து அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவர்களைச் சேர்க்கவும், இதற்கு பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.

இதுபோல, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு மற்றொரு ஆணையை அரசு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு இந்த ஆணைகள் பெரும் பயனளிக்கும் என்றவகையில், வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது.

என்றாலும், கூடுதல் மாணவர்களைச் சேர்க்கும்போது, அதிக உள்கட்டமைப்பு வசதிகள்வேண்டும், கூடுதலாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்வேண்டும். ஆனால், கூடுதல் மாணவர் சேர்க்கையினால், கூடுதல் பணியிடங்களைக் கோரக்கூடாது என்ற நிபந்தனையை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மொத்தத்தில், ஏழை-எளிய, வசதியற்ற குடும்ப மாணவர்கள் பட்டம் பெற்று ஒளிமயமான வாழ்க்கை பெறுவதற்கு, இந்த அரசாணை நிச்சயமாக உதவும் என்றவகையில், அவர்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், நன்றியையும் பெறும் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்