போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு!
|தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதையும் மறைப்பதில்லை. உண்மை நிலையை, நாட்டின் நடப்பு நிலையை அப்படியே சொல்லிவிடுகிறார்.
அந்த வகையில், கடந்த 10-ந்தேதி சென்னையில், "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" திட்ட தொடக்க விழாவின்போது, "தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும், வருத்தமும் அதிகமாகிறது" என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடும் - வேரடி மண்ணோடும் களை எடுக்க அரசு மட்டுமல்ல, போலீஸ் மட்டுமல்ல, மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆந்திரா, ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டுக்குள் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை சென்டிரலில் சமீப காலமாக கஞ்சா பிடிபடுவது அதிகமாகி இருக்கிறது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை கஞ்சா வேட்டை 1 என்றும், ஏப்ரல் முதல் ஜூலை வரை கஞ்சா வேட்டை 2 என்றும் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்த உத்தரவிட்டார். இந்த இரு வேட்டைகளிலும், பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்றது, பயன்படுத்தியது, பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், ஏன் ஆஸ்பத்திரி வளாகங்களுக்குள்ளேயே கஞ்சா விற்பனையானது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே, கஞ்சா பொட்டலங்கள் கொண்ட மஞ்சள் பை ரெயிலில் இருந்து தூக்கிவீசப்பட்டதையும், அதை ஒருவன் எடுத்து சென்றதையும் 'தினத்தந்தி' போட்டோகிராபர் படம் எடுத்து, தினத்தந்தியில் அது பிரசுரிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று சூளுரைத்து, கடந்த 10-ந்தேதி சென்னையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். "எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன்' என்று ஒவ்வொரு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், அதுவே முதல் வெற்றி. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும்" என்று கூறி, பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
இப்போது இருக்கும் பல சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு, போதைப் பொருள் குற்றங்களை செய்பவர்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை பிறப்பிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மிக அருமையான மற்றொரு ஆலோசனையாக, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, அடுத்த நாள் நடந்த விழாவில் பேசும்போது, 2 ஆலோசனைகளை அவர் கூறினார். முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, அதை விற்பவர்களை கைது செய்வது, இது சட்டத்தின் வழி. இதை அரசும், குறிப்பாக காவல் துறையும் கவனிக்கும். 2-வது வழி, போதை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான். இதை பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான், அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று கூறி, கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இது ஒரு சமுதாய சீர்கேடு என்ற வகையில், ஒரு பக்கம் காவல் துறையும், மற்றொரு பக்கம் பொதுமக்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வும்தான் தடுக்க முடியும். அதை செய்யும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.