< Back
தலையங்கம்
Double impact on the economy
தலையங்கம்

பொருளாதாரத்தில் இரட்டை தாக்கம்

தினத்தந்தி
|
25 May 2024 6:08 AM IST

ஒவ்வொரு நிறுவனத்தின் மதிப்பும், வளர்ச்சியும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளின் விலை மதிப்பை வைத்தே கணக்கிடப்படுகிறது.

சென்னை,

இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ்சின் புள்ளி முதல் முறையாக கடந்த மாதம் 75 ஆயிரத்தை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. தற்போது அதையும் தாண்டி 75,410 புள்ளிகளை தொட்டுவிட்டது. இது சாதாரண பாய்ச்சல் அல்ல. குதிரைப்பாய்ச்சலையும் தாண்டி 8 கால் பாய்ச்சல் என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு நிறுவனத்தின் மதிப்பும், வளர்ச்சியும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளின் விலை மதிப்பை வைத்தே கணக்கிடப்படுகிறது. இந்த பங்குகளின் விற்பனை மற்றும் கொள்முதல் ஆசியாவிலேயே மிக முக்கியமான மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் புள்ளிகளை மையமாக வைத்து ஏறியிறங்கும் விலையை வைத்தே மேற்கொள்ளப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 சிறந்த கம்பெனிகளின் ஒட்டுமொத்த மதிப்பை அன்றாடம் மதிப்பிட்டுதான் சென்செக்ஸ் புள்ளிகள் நிர்ணயிக்கப்படுகிறது. அதுபோல டெல்லி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 கம்பெனிகளின் மதிப்பைவைத்து நிப்டி மதிப்பிடப்படுகிறது. 1979-ல் முதலில் 100 புள்ளியோடு தன் பயணத்தை தொடங்கிய சென்செக்ஸ் 13 ஆண்டுகள் கழித்து 1999-ல் 5 ஆயிரம் புள்ளிகளைத்தொட்டது. முதல் 5 ஆயிரம் புள்ளிகளைத்தொட 13 ஆண்டுகள் ஆனாலும், அடுத்த 5 ஆயிரம் புள்ளிகளை கடந்து 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்ட 8 ஆண்டுகள்தான் ஆனது. அடுத்தடுத்த 5 ஆயிரம் புள்ளிகள் நாட்டின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தால் மிக குறுகிய காலமே ஆனது.

ஆனால் 70 ஆயிரம் சென்செக்ஸ் புள்ளி 75 ஆயிரமாக உயருவதற்கு 82 பங்குச்சந்தை வேலைநாட்களே ஆனது. இந்த உச்சகட்ட உயர்வால் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் வருமானம் பெருமளவில் எகிறியது. ஏப்ரல் மாதத்தின் முதல் 10 நாட்களிலேயே முதலீட்டாளர்களின் வருவாய் ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் கோடி அதிகரித்தது. 'டீமேட்' கணக்கு வைத்திருப்பவர்களால் மட்டுமே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யமுடியும். அந்தவகையில், இப்போது நிறைய பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வந்துவிட்டார்கள் என்பது டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கோடியே 60 லட்சமாக இருந்தநிலை 2024 மார்ச்சில் 15 கோடியே 51 லட்சமாக உயர்ந்திருப்பதில் இருந்தே தெரிகிறது.

நேற்று சென்செக்ஸ் புள்ளி 75,410 ஆக இருப்பதன் காரணம், இந்திய பொருளாதாரம் வளர்ந்திருப்பதும் அதன்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் குவிந்த முதலீடும்தான். இதுமட்டுமல்லாமல், உள்நாட்டிலும் மக்களின் முதலீடு பெருகியிருப்பதும் மற்றொரு காரணமாகும். இந்த 75 ஆயிரம் அடுத்த 5 ஆண்டுகளில் இருமடங்காக அதாவது, ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உச்சத்துக்கு போகும் என்று நாட்டின் வளர்ச்சி, மக்களின் வருமான உயர்வை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, தங்கத்தின் விலையும் பவுன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியும், இறங்கியும் சுழன்று கொண்டிருக்கிறது. மற்ற சேமிப்புகளைவிட தங்கத்தில் செய்யப்படும் முதலீடு அதிக வருமானம் தரும் என்ற நம்பிக்கை, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கப்போகிறது என்ற பரவலான எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால், தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்துகொண்டே போகிறது. மொத்தத்தில், இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது, வளர்ந்துகொண்டே போகிறது என்பதற்கு இந்த உயர்வுகளே சாட்சியாகும்.

மேலும் செய்திகள்