மின் கட்டண உயர்வால் மக்களுக்கு இரட்டை சுமை!
|தமிழகத்தின் மொத்த மின்தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது.
சென்னை,
கடந்த 2 ஆண்டுகளாகவே ஜூலை மாதம் வந்துவிட்டால் எல்லோருடைய குடும்ப பட்ஜெட்டிலும் லேசாக மின்சாரம் பாய்வதுபோல இருக்கிறது. காரணம், மின்சாரக்கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் கட்டணத்தை உயர்த்தவேண்டும், அந்த உயர்வும் 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டுக்கான நுகர்வோர் விலைகுறியீட்டு எண் இதில் எது குறைவோ அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு ஜூலை முதல் கட்டணம் உயர்த்தப்படவேண்டும் என்ற விதிகளின்படி, இப்போது நுகர்வோர் விலைகுறியீட்டு எண்ணின் அடிப்படையில் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது. இந்த உயர்வு முன்தேதியிட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசைகளில் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவதால் அவர்களுக்கு மின்கட்டண உயர்வால் பாதிப்பு எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த கட்டண உயர்வு வலிக்கத்தான் செய்யும். குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில், மொத்த உற்பத்தி செலவில் என்ஜினீயரிங் தொழிற்சாலைகளுக்கு 15 சதவீதமும், பவுண்டரிகளுக்கு 35 சதவீதமும் மின்சாரப்பயன்பாட்டு செலவுக்கே போய்விடும். ஒரு யூனிட்டுக்கு 55 காசு என்பது சிறியதாக தெரிந்தாலும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்போது அதன் சுமை அழுத்தும். இதனை மக்கள் மீதுதான் அவர்கள் ஏற்றிவைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் உயரும். அதை மக்களிடம் விற்பனை செய்யும்போது விலை அதிகரிக்கும். இப்போது மின்சாரவாரியம் உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் மக்களுக்குத்தான் இரட்டைச்சுமை. ஒன்று அவர்களுடைய வீடுகளுக்கான மின்கட்டணமும் உயருகிறது. அடுத்து அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைக்கட்டணமும் உயரும்.
தற்போது தமிழகத்தின் மொத்த மின்தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது. மொத்த உற்பத்தியில் நமக்கு பற்றாக்குறை சராசரியாக 3,630 மெகாவாட்டாகும். இதை வெளிச்சந்தையில் வாங்கும்போது சிலநேரங்களில் அதிகபட்சமாக ரூ.12-ம், மிகக்குறைந்த விலையாக யூனிட்டுக்கு ரூ.2-ம் கொடுக்க வேண்டியுள்ளது. சராசரி விலை யூனிட்டுக்கு ரூ,7 ஆகும். சூரியஒளி மின்உற்பத்திக்கான திறன் 7 ஆயிரம் மெகாவாட் வரை இருந்தாலும் மின்வாரியம் வாங்குவது 3,360 மெகாவாட்தான். சூரியஒளி மின்சாரத்தை ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் இருந்து யூனிட்டுக்கு ரூ,7.05-க்கு வாங்கப்பட்ட விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது யூனிட்டுக்கு ரூ,3-க்கு வாங்கப்படுகிறது. இவ்வளவு இருந்தும் இப்போது மின்சாரவாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம் மொத்த வினியோகத்தில் 30 சதவீதம் விவசாயிகளுக்கும், 100 யூனிட் குடிசை, கைத்தறி போன்ற பிரிவுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுவதுதான். உற்பத்திச் செலவும், கொள்முதல் விலையும் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் மின்சாரக்கட்டணம் அதிகமாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் மின்சாரக்கட்டணம் குறைவு என்றாலும், ஒருவருக்கு மின்சாரத்தை இலவசமாக கொடுத்துவிட்டு, அந்த சுமையை மற்ற பொதுமக்கள் மீதும், வணிகநிறுவனங்கள் மீதும், தொழிற்சாலைகள் மீதும் ஏற்றுவதை தவிர்க்கவேண்டும். மொத்தத்தில் வெளிச்சந்தையில் வாங்கும் கொள்முதல் விலையை குறைத்து, ஆண்டுதோறும் மின்சாரக்கட்டணத்தை உயர்த்தும் முறையை மாற்றியமைக்கவேண்டும்.