< Back
தலையங்கம்
நீரிழிவு நோய்க்கு பயப்பட வேண்டாம்
தலையங்கம்

நீரிழிவு நோய்க்கு பயப்பட வேண்டாம்

தினத்தந்தி
|
29 Nov 2023 1:22 AM IST

கடந்த 14-ந்தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ரத்தத்தில், சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் நீரிழிவு நோய்க்கான காரணமாகும்.

கடந்த 14-ந்தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ரத்தத்தில், சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் நீரிழிவு நோய்க்கான காரணமாகும். எந்த டாக்டரிடம் எந்த நோய்க்கு சிகிச்சைக்காக போனாலும், 'உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா?' என்று கேட்கிறார்கள். ஆமாம் என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து விட்டுத்தான் சிகிச்சையை தொடங்குகிறார்கள்.

நீரிழிவு நோய் ஒரு மோசமான நோய். கண் பார்வை குறைதல், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, மலட்டுத்தன்மை போன்ற பல நோய்களுக்கு நாட்பட்ட நீரிழிவு நோய்தான் காரணம். உலகில் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயின் தலை நகரம் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. சீனாவுக்கு அடுத்ததாக நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இந்திய மருத்துவ கவுன்சில்-இந்திய நீரிழிவு நோய் ஆய்வில், இந்தியாவில் 10 கோடியே 10 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் 42 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டும், 30 லட்சம் பேர் 'பிரீடயாபட்டீஸ்' எனப்படும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர், அதாவது, மக்கள் தொகையில் அதிக சதவீதம் பாதிப்பு உள்ள முதல் மாநிலம் கோவா. 2-வது இடத்தில் புதுச்சேரியும், 5-வது இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், நமது உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் நீரிழிவு நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நீண்ட காலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லையென்றால், பல நோய்களுக்கு மூலகாரணியாக ஆகிவிடும். நீரிழிவு நோயை விழிப்புடன் இருந்தால் தடுக்கலாம்.

உறுப்புகளின் சீரழிவு என்று கூறும் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்திய நாராயணன், 'நீரிழிவு நோய் குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருந்தாலே நீரிழிவு நோயின் மோசமான விளைவுகள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் தற்காலிக குணமடைந்த நிலையான 'ரெமிசன்' நிலையை அடைய மொத்த உடல் எடையில் 5 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் கட்டுக்குள் கொண்டு வருவது எளிது' என்கிறார்.

சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளன தலைவர் அக்தர் உசைன், 'இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும், இதனால் மற்ற பாதிப்புகள் வராமல் தடுக்கும் முறைகளை கற்றுக்கொடுக்கவும் வேண்டும்' என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கும் நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கும் இந்த நோய் பற்றி தெரியும். ஆனால் கிராமப்புற மக்களுக்கும், பாமர மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை செய்ய வேண்டும். இலவச ரத்த பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்