< Back
தலையங்கம்
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் வீண் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலையங்கம்

வீண் பயம் வேண்டாம்!

தினத்தந்தி
|
15 May 2024 6:21 AM IST

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் வீண் பயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தடுப்பூசியான 'கோவிஷீல்டு' தயாரித்து வந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தி வாபஸ் வாங்கிவிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், முதன் முதலில் சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி, சீனாவில் இருந்து கேரளா வந்த மருத்துவ கல்லூரி மாணவி மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது. தமிழ்நாட்டை பொருத்தமட்டில், மஸ்கட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த ஒருவர் மூலம் அதே ஆண்டு (2020) மார்ச் 7-ந்தேதி கொரோனா புகுந்தது.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி அவசியம் என்ற நிலையில், அதற்கான ஆராய்ச்சி பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கம், பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது. ஒரு வழியாக, கொரோனாவுக்கு 2 வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. நோயின் தாக்கம், தொடர் உயிரிழப்புகள் அதிகமாக இருந்ததால், நீண்டநாள் பரிசோதனைக்கு உட்படுத்தாமல், இந்த மருந்துகள் விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதற்காக தனியாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி மாநில அரசால் இலவசமாகவே போடப்பட்டது. அனைவருக்கும் முதல் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதுடன் பூஸ்டர் டோஸ் போடவும் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 12 கோடியே 75 லட்சத்து 35 ஆயிரத்து 746 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் 10 கோடியே 25 லட்சத்து 62 ஆயிரத்து 460 டோஸ்கள் ஆகும். இவ்வளவு நாளும் தடுப்பூசியால் பக்க விளைவுகள் இருந்ததாக அரசல் புரசலாக சொல்லப்பட்டாலும் இப்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக, கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட 51 பேர் இங்கிலாந்து கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், "இந்த தடுப்பூசியால் மிக அபூர்வமாக ரத்தம் உறைதல், ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தலைவலி, பார்வை மங்குதல், நெஞ்சு வலி ஏற்படலாம்" என்று தெரிவித்துள்ளது.

பக்க விளைவுகளெல்லாம் மிக அபூர்வமானது, அதுவும் முதல் டோஸ் போட்டபின்பு அதிகபட்சமாக 21 நாட்களுக்குள்தான் ஏற்படும் என்றும் கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவல், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் வீண் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் இதை முற்றிலும் மறுத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும் இத்தகைய அபூர்வ பக்க விளைவுகள் பற்றி 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதியே எச்சரித்துள்ளது.

"பொதுவாகவே எந்த தடுப்பூசி போடப்பட்டாலும் அதன் பக்க விளைவுகள் ஒரு மாதத்துக்குள்ளேயே தெரிந்துவிடும். எனவே, 2021-ம் ஆண்டு போடப்பட்ட தடுப்பூசிக்கு இப்போது பக்க விளைவுகள் ஏற்படும் என்று அச்சப்படுவது தேவையற்றது" என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஆக, தடுப்பூசி போட்ட யாருக்கும் அச்சம் வேண்டாம். கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி மட்டும் இல்லையென்றால் எத்தனை கோடி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதையும் நினைத்துப்பார்க்கவேண்டும். உலகத்தை ஒரு பேரழிவில் இருந்து காப்பாற்றிய தடுப்பூசி பற்றி இப்போது எந்தவித அச்சமும், குழப்பமும், சந்தேகமும் தேவையில்லை.

மேலும் செய்திகள்