கடவுளின் சொந்த தேசத்தில் பேரழிவு
|வயநாடு மாவட்டத்தில் மலைகளுக்கிடையே உள்ள முண்டக்கை என்ற நகரத்திலும், சூரல்மலை, மேப்பாடி போன்ற ஊர்களிலும் தேயிலைத்தோட்டங்கள், சுற்றுலாப்பயணிகளுக்கான விடுதிகள் நிறைய இருக்கின்றன.
கேரள மாநிலம் ஒரு வளமான மாநிலமாகும். அதிகமாக மலைப்பிரதேசங்களையும், பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளையும் கொண்ட சமவெளி பிரதேசங்களையும், வற்றாத ஆறுகளையும் கொண்ட செழிப்பான மாநிலமாகும். அதனால்தான் கேரளாவை கடவுளின் தேசம் என்று காலம் காலமாக அழைக்கிறார்கள். அத்தகைய கடவுளின் சொந்த தேசத்தில், இப்போது ஒரு பேரழிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் குலை நடுங்க வைக்கிறது. வயநாடு மாவட்டத்தில் மலைகளுக்கிடையே உள்ள முண்டக்கை என்ற நகரத்திலும், சூரல்மலை, மேப்பாடி போன்ற ஊர்களிலும் தேயிலைத்தோட்டங்கள், சுற்றுலாப்பயணிகளுக்கான விடுதிகள் நிறைய இருக்கின்றன.
இந்த பகுதிகளில் 48 மணி நேரத்தில் 57.2 செ.மீ மழை தொடர்ந்து பெய்ததால் வெள்ளக்காடாக மாறியதோடு, அடுத்தடுத்து நிலச்சரிவும் இருமுறை நடந்து, முண்டக்கை நகரையும் மற்றும் அங்கு உள்ள சிறு சிறு கிராமங்களையும் சேறும், சகதியுமாக மூடிவிட்டது. முதல் நிலச்சரிவு அதிகாலை 2 மணிக்கும், அடுத்த நிலச்சரிவு அதிகாலை 4.10 மணிக்கும் பயங்கரமாக ஏற்பட்டது. மலையில் இருந்து மரங்களையும், பாறைகளையும் மட்டுமல்லாமல் சேறும், சகதியையும் கலந்து வெள்ளம்போல அடித்துவந்த தண்ணீர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்களை உயிரோடு சமாதியாக்கிவிட்டது. பல இடங்களில் வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் மண்ணில் புதைந்து கிடக்கிறது. முண்டக்கை நகரையும், சூரல்மலையையும் இணைக்கும் பாலம் முழுவதுமாக சேதமடைந்து, மற்ற பகுதிகளோடு உள்ள தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
போலீஸ், தீயணைக்கும் படை, தேசியபேரிடர் மீட்புப்படை, ராணுவம், விமானப்படை என்று அனைத்து பிரிவினரும் களத்தில் இறங்கினாலும் மிக கொடூரமான நிலச்சரிவு, மோசமான காலநிலையால் முழுவீச்சில் இறங்கி அவர்களால் பணியாற்ற முடியவில்லை. இதுவரை 256 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் 300 பேர் கதி என்ன? என்று தெரியவில்லை. அரபிக்கடலில் வெப்பம் அதிகரித்ததாலும், தீவிர மேகக்கூட்டம் உருவானதாலும்தான் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். வயநாடு மாவட்டம் முழுவதும் பூமிக்குகீழ் 70 அடி ஆழம் வரை செம்மண் அடுக்குகளால் நிறைந்தவை. அதிகமாக மழை பெய்யும்போது இந்த மண் அடுக்குகளுக்குள் ஈரம் அதிகமாகி மண்ணின் இறுக்கம் குறைவதால், நிலச்சரிவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தில் உள்ள இந்த பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுக்க தவறியதாலும், சேதமும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. முண்டக்கை பகுதியில் இதற்கு முன்பு 1984 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலரை பலிவாங்கியிருக்கிறது. 2020-ல் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ள 4 ஆயிரம் குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்தவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. முண்டக்கை நகரமும் அதில் அடங்கும். இதுபோன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் நிபுணர்கள், புவியியல் நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி செயல்படுவதே சிறந்ததாகும்.
ஆபத்துநேரத்தில் ஆபத்பாந்தவனாக வருபவர்தான் உண்மையான நண்பர் என்ற வாக்குக்கிணங்க முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், உடனடியாக தமிழ்நாடு சார்பில் ரூ,5 கோடி நிதியை கேரள அரசாங்கத்துக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரளாவுக்கு துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து 2 மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகளான கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்ட டாக்டர் சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக்குழுவை அனுப்பிவைத்துள்ளதும், அதில் மருத்துவக்குழுவும் சென்றிருப்பதும் மனிதநேயமிக்க, கருணையுள்ள செயலாகும்.