< Back
தலையங்கம்
பெருமையும்.. சோகமும்..!
தலையங்கம்

பெருமையும்.. சோகமும்..!

தினத்தந்தி
|
19 Jun 2024 5:52 AM IST

நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்களை நிர்வகித்து வரும் ரெயில்வே துறை சமீப ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியை கண்டுவருகிறது.

இந்திய மக்களின் வாழ்க்கை பயணத்தில், ரெயில் பயணம் முக்கிய அங்கம் வகிக்கிறது. போக்குவரத்தில் பாதுகாப்பானது, வசதியானது என்பதற்காகத்தான் மக்கள் ரெயில் பயணத்தை பெரிதும் விரும்புகிறார்கள். நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்களை நிர்வகித்து வரும் ரெயில்வே துறை சமீப ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியை கண்டுவருகிறது. தற்போது, வந்தே பாரத் ரெயில்கள், விரைவில் புல்லட் ரெயில் என்று பல்வேறு வியத்தகு முன்னேற்றங்களை அடைந்துவரும் ரெயில்வே துறையால், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு நேற்று முன்தினம் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகத்தில் பல இடங்களில் உயரமான ரெயில் பாலங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இப்போது எல்லாவற்றையும் விட உயரமான இடத்தில் ரெயில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் வகையில், உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா இணைப்பு திட்டத்தை ரெயில்வே துறை நிறைவேற்றி வருகிறது. காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே 1178 அடி உயரத்தில் இந்த ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தைவிட 194 அடி அதிக உயரம் கொண்டது. 'ஆர்ச்' வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் சுற்றுலா பயணிகளை கவரும்.

இத்தனை சாதனைகளை தாங்கிய ரெயில் பாலத்தில் முதல் முறையாக நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதே நாளில், சொல்லொண்ணா துயரத்தை அளிக்கும் கோர ரெயில் விபத்து ஒன்று நடந்துவிட்டது. மேற்கு வங்காளம் நியூ ஜல்பைபுரி ரெயில் நிலையம் அருகே நின்றுகொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி, பின்புறத்தில் இருந்த 2 சரக்கு பெட்டி மற்றும் ஒரு பயணிகள் பெட்டியை தூக்கிவீசிவிட்டது. இந்த விபத்தில் சரக்கு ரெயிலின் டிரைவர், பயணிகள் ரெயிலின் கார்டு மற்றும் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயத்துடனும், 32 பேர் காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு மனிதத் தவறுதான் காரணம் என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த ரெயில் பாதையில் கடந்த சில நாட்களாகவே சிக்னல் கோளாறு இருந்து வந்துள்ளது. இதனால், எல்லா ரெயில்களும் சிக்னலில் பகலில் ஒரு நிமிடமும், இரவில் 2 நிமிடமும் காத்திருந்து, அதன்பிறகு 15 கிலோமீட்டர் வேகத்தில்தான் மெதுவாக இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த விதியை மீறி சரக்கு ரெயிலை டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதுதான் விபத்துக்கான காரணம். ஏற்கனவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தின்போது, "ஒரே தண்டவாளத்தில் ரெயில்கள் அடுத்தடுத்து மற்றும் எதிரும் புதிருமாக செல்வதைத் தடுக்க 'கவாச்' எச்சரிக்கை கருவி அனைத்து ரெயில்களிலும் பொருத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கை எழுந்து, அதற்கான முயற்சியும் தொடங்கியுள்ளது. தற்போதைய ரெயில் விபத்தை ஒரு பாடமாகக்கொண்டு எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க போதுமான நிதியை ஒதுக்கி, அனைத்து ரெயில்களிலும் 'கவாச்' கருவியை போர்க்கால அடிப்படையில் பொருத்தவேண்டும். ரெயில்களில் தரத்தை கூட்டி வசதிகளை உயர்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக மிக முக்கியமானதாகும்.

மேலும் செய்திகள்