< Back
தலையங்கம்
மின்சார பஸ்களை தனியார் ஓட்ட முடிவு
தலையங்கம்

மின்சார பஸ்களை தனியார் ஓட்ட முடிவு

தினத்தந்தி
|
13 Feb 2024 5:24 AM IST

மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

எந்த ஒரு திட்டத்திலும் தனியார் பங்களிப்பு இருந்தால் நிச்சயமாக அது சிறப்பாக இருக்கும். இப்போது போக்குவரத்தில் மத்திய அரசாங்கம் ஏற்கனவே தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன. ரெயில்வேயிலும் பல சேவைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. இப்போது தமிழக அரசும் இது தொடர்பாக ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் உள்ள 9 போக்குவரத்து கழகங்களில் தினமும் 18 ஆயிரத்து 723 பஸ்கள் ஓட்டப்படுகின்றன.

இந்த பஸ்களெல்லாம் டீசல் பஸ்கள்தான். இப்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலால் திடீர் வெள்ளம், புயல், வறட்சி என்று அடிக்கடி ஏற்படுகிறது. அதிக அளவில் கரியமில வாயு அதாவது 'கார்பன் டை ஆக்சைடு' வெளியேற்றப்படுவதால்தான் இந்த கால நிலை மாற்றம் ஏற்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு உலகில் அதிக வெப்பமான ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டும் அதிக வெப்பம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதைத்தடுக்க வேண்டுமென்றால் 'கார்பன் டை ஆக்சைடு' வெளியேற்றம் குறைக்கப்பட வேண்டும். அதற்கு உறுதுணையாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் இந்த நல்ல பயன்பாட்டை தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டார்கள். நிறைய மின்சார இரு சக்கர வாகனங்கள், கார்கள் பச்சை நம்பர் பிளேட்டுடன் ஓடுவதை மகிழ்ச்சியுடன் பார்க்க முடிகிறது. இனி அடுத்த சில மாதங்களில் அதாவது, ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் மின்சார பஸ்கள் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓடுவதை பார்க்கமுடியும். சத்தமில்லாமல், புகையில்லாமல் சுற்றுசூழலை கெடுக்காத பசுமை எரிசக்தி அதாவது 'பேட்டரி' மூலம் இந்த பஸ்கள் ஓடும்.

ஜெர்மன் நாட்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த 100 மின்சார பஸ்களும் இயங்கும். ஒரு பஸ்சின் விலை ரூ.1.20 கோடியாகும். 70 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த பஸ்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் ஓடும். மீண்டும் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்துவிட்டால் மறுபடியும் 8 மணி நேரம் ஓடும். இந்த பஸ்களை இயக்கி பராமரிக்கும் பணியை போக்குவரத்து கழக ஊழியர்களிடம் கொடுக்கப்போவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு டீசல் பஸ்களை இயக்கித்தான் பழக்கம் இருக்கிறதே தவிர மின்சார பஸ்களை இயக்குவதற்கோ, பராமரிப்பதற்கோ, பயிற்சி இல்லாததால் அந்த மின்சார பஸ்சை வாங்கும் நிறுவனமே இந்த இயக்கம், பராமரிப்பு பணியையும் மேற்கொள்கிறது. 'டிக்கெட்' கட்டண வசூலை போக்குவரத்து கழகமே எடுத்துக்கொள்ளும். இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக அந்த நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் கொடுக்கப்படும். இப்போது 100 மின்சார பஸ்களை வாங்கி சென்னையில் இயக்கப்போகிறோம். விரைவில் மேலும் 400 மின்சார பஸ்களை வாங்கி மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். இது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த முயற்சி தொடரவேண்டும். தமிழ்நாடு முழுவதும் மின்சார பஸ்களை இயக்க வேண்டுமானால் அரசால் மட்டும் முடியாது. தனியாருக்கும் குறிப்பாக வேலை இல்லாத இளைஞர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்