< Back
தலையங்கம்
மக்களை மிரள வைத்த மிக்ஜம் புயல் - மழை
தலையங்கம்

மக்களை மிரள வைத்த மிக்ஜம் புயல் - மழை

தினத்தந்தி
|
8 Dec 2023 2:00 AM IST

சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

போதும்.. போதும்.. என்று மட்டுமல்ல, வேண்டாம்.. வேண்டாம்.. என்று கதறும் அளவுக்கு கடந்த 3-ந்தேதி இரவில் இருந்து 4-ந்தேதி இரவு வரை பெய்த 'மிக்ஜம்' புயல் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. சென்னை நகரையே மூழ்கடித்துவிட்டது. புயலினால் கடலில் அலை சீற்றமும் அதிகமாக இருந்த காரணத்தால், மழைநீர் கடலுக்குள் சென்றபோது, அதை கடல் உள்வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதால், மழைநீர் கடலுக்குள்ளும் போக முடியவில்லை. மேலும் 2015-ம் ஆண்டைவிட இந்த ஒரு நாளில் பெய்த மழை மிகவும் அதிகமாகும். பல இடங்களில் இப்போதும் மார்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியிருப்பதால் படகுகளில் சென்றுதான் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய நிலை இருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் இந்த புயல் மழையினால் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் சென்னையை மூழ்கடித்த மிக்ஜம் புயல் கோரத்தால் பாதிப்பு ஏற்பட்டது. எப்படியென்றால், சென்னையில் இருந்து புறப்படும், ரெயில்கள், பஸ்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மாவட்டங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் சரியாக போய் சேரவில்லை. சென்னை மற்றும் சுற்றிலும் உள்ள மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதுமே பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

அரசு அலுவலகங்களுக்கும் 2 நாட்கள் விடுமுறை இருந்தது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க சொன்ன அரசு, வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையை கடைப்பிடிக்க ஆலோசனை வழங்கியது. ஆனால், மின்சார சப்ளை இல்லாத நிலையிலும், இன்டர்நெட் இல்லாத நிலையிலும், எந்த வேலையையும் வீட்டில் இருந்து பார்க்க முடியவில்லை. செல்போன் டவர் கிடைக்காமல், யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. சிறு, குறு, நடுத்தர, கனரக தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பால், காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும், அனைத்து துறையினரும், தேசிய பேரிடர் மேலாண்மை படையினரும், முப்படையினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளிலும், நிவாரண பணிகளிலும் இறங்கினர். தமிழகம் முழுவதிலும் இருந்து 75 ஆயிரம் பேர் மீட்பு மற்றும் துப்புரவு பணிகளுக்காக சென்னை வந்துள்ளனர். சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இப்போது மத்திய அரசாங்கம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2-வது தவணையாக ரூ.450 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டதுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அரசு மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகளால், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஏற்பட்ட உயிர் சேதம், பொருட்சேதத்தைவிட இப்போது குறைவு. என்றாலும், இந்த மழை சேதத்தை அரசு ஒரு பாடமாக, ஒரு வேண்டாத அனுபவமாக கருத்தில் எடுத்துக்கொண்டு, எதிர் காலத்தில் எவ்வளவு மழை வந்தாலும், எந்த சேதமும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையில் ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஏற்கனவே அரசு நியமித்த குழு 3 அறிக்கைகளை அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி, இனி ஒருபோதும் இப்படி ஒரு சேதம் ஏற்படாத நிலையை உருவாக்கவேண்டும்.

மேலும் செய்திகள்