தேர்தல் வாக்குறுதியில் சமையல் கியாஸ் !
|இப்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
இப்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் வேறு என்ன பயன் இருக்குமோ?, இருக்காதோ? பெட்ரோல்-டீசல் விலை மட்டும் நிச்சயம் உயராது. இந்தியாவில் கச்சா எண்ணெய் கிடைப்பதில்லை. நமது தேவையின் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரத்தின் ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை விலையை நிர்ணயிக்கின்றன. முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை நிர்ணயம் நடந்தது. இப்போது பல மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதாலும், அடுத்தடுத்து தேர்தல்கள் வந்து கொண்டிருப்பதாலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இது பொதுமக்களுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது. சரக்கு போக்குவரத்துக்கும் இது பெரிய உதவியாக இருக்கிறது.
இதுபோல சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும், குடும்பங்களில் மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்ற பொருட்களின் பயன்பாட்டை விலையேற்ற, இறக்கத்துக்கு ஏற்றாற்போல குறைத்துக்கொள்ளலாம், கூட்டிக்கொள்ளலாம். ஆனால், சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டை மட்டும் குறைக்க முடியாது. இல்லத்தரசிகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்பது மிகமிக முக்கியமானது. அதைப் புரிந்துகொண்டுதான், அவர்களின் வாக்குகளைப் பெற முக்கிய ஆயுதமாக, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை இருக்கிறது.
ஆகவேதான், இந்த 5 மாநில தேர்தல்களிலும் போட்டியிடும் கட்சிகள் எல்லாம், தங்கள் தேர்தல் வாக்குறுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைப்போம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்குவோம் என்று போட்டி போட்டுக்கொண்டு உறுதிமொழிகளை கூறியுள்ளன. எரிசக்தி நிபுணர் நரேந்திர தனேஜா இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது, "சமையல் கியாஸ் இப்போது அரசியலாகிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அரசு அமைக்க வேண்டும் என்று ஆசைப்படும் அனைத்து அரசியல் கட்சிகளும், ஏழை, எளிய கீழ்த்தட்டு நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை குறிவைக்கிறது. குடும்ப பட்ஜெட்டில் முக்கிய செலவு சமையல் கியாஸ் சிலிண்டர் விலைதான். அதனால்தான், அரசியல் கட்சிகளின் ராடாரில் சமையல் கியாஸ் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் ஏழை குடும்பங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் பெரிய ஓட்டு வங்கியை அளித்துள்ளது. எனவே, அதே வழியில் சென்றால், நமக்கும் ஓட்டு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமையல் கியாஸ் விலை குறைப்பை தேர்தலுக்காக கையில் எடுத்துள்ளது என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மந்திரிசபை கூட்டத்தில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200-ம் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.300-ம் குறைக்க முடிவெடுக்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டது.
மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும், பெட்ரோல்-டீசல் விலையும் உயர்த்தப்படாது. அது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து குடும்ப தலைவர்களுக்கும், குறிப்பாக ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்கள், கார் வைத்து இருப்பவர்களுக்கும், சரக்கு போக்குவரத்து வாகனங்கள் வைத்து இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைக்கொடுத்துள்ளது.