மாநில அரசின் கடன் குறித்து ஆக்கப்பூர்வ விவாதம்
|நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆழமான தயாரிப்புகளோடு சட்டசபையில் சொற்போர் நடத்தியது பாராட்டும்படியாக இருந்தது.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க., அ.தி.மு.க. இருகட்சிகளின் விவாதங்களும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், அவர்கள் தமிழக அரசின் நிதிநிலைமையை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் இருந்தது. அரசியல் கருத்துகள் பரிமாறப்பட்டாலும் அதையும் தாண்டி ஆக்கப்பூர்வமான பொருளாதார கருத்துகள் பளிச்சிட்டன. விவாதங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கே உள்ள தனித்திறமையோடு ஆணித்தரமாக கருத்துகளை முன்வைத்தார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆழமான தயாரிப்புகளோடு சட்டசபையில் சொற்போர் நடத்தியது பாராட்டும்படியாக இருந்தது.
குறிப்பாக, அரசின் கடன் பற்றி இருவரும் மேற்கொண்ட விவாதங்கள் அறிவுப்பூர்வமாக இருந்தது. பட்ஜெட் உரையில், "2024-2025-ம் ஆண்டில் மாநில அரசு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 584 கோடியே 48 லட்சம் அளவுக்கு மொத்த கடன்பெற திட்டமிட்டுள்ளது. மேலும், ரூ.49 லட்சத்து 638 கோடியே 82 லட்சம் மதிப்பிலான பொதுக்கடனை அரசு திருப்பிச்செலுத்தும். இதன் விளைவாக 31-03-2025 அன்று நிலுவையில் உள்ள கடன் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சமாக இருக்கும்" என மதிப்பிடப்படுகிறது. "2024-2025-ம் ஆண்டின் மாநில உற்பத்தி மதிப்பில் இது 26.41 சதவீதமாகும்" என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. இதன் பின் பட்ஜெட் உரை மீது விவாதம் நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "கடனை குறைப்போம் என்று சொன்ன அரசு கடனையும் குறைக்கவில்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் 4 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 391 கோடி கடன்சுமை தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. 2024-2025-ம் ஆண்டு இறுதியில் நிகர கடன் அளவு ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடியாக உயரும் என்று அரசு கூறியுள்ளது. நாங்கள் விட்டுச்சென்றபோது தமிழ்நாடு அரசு அதுவரை பெற்ற கடன் அளவு ஐந்தே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படுகிறது" என கூறி அரசின் நிதி மேலாண்மை மீது குற்றஞ்சாட்டினார்.
இந்த விவாதத்தில், பதிலுரை அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு கைதேர்ந்த பொருளாதார நிபுணர் போல, ஏன் கடன் வாங்க நேரிட்டது? என்பதற்கான காரணங்களை புட்டு புட்டு வைத்தார். "நாங்கள் 10 ஆண்டுகளில் குறைவாக கடன் வாங்கினோம். ஆனால், அவர்கள் 3 ஆண்டுகளில் அதிகமாக கடன் வாங்கினார்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் அப்படி வாங்கியிருக்கலாம். ஆனால், 2011-ல் வரவு - செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1.02 லட்சம் கோடி. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.2.51 லட்சம் கோடி. ஆனால் இன்றோ, வரவு-செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.4.12 லட்சம் கோடியாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.31.55 லட்சம் கோடியாகவும் உள்ளது. கடனை பொறுத்தவரையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடவேண்டும். 15-வது நிதிக்குழு தமிழ்நாட்டுக்கு நிர்ணயித்துள்ள வரும் நிதியாண்டுக்கான கடன் வரம்பு 28.9 சதவீதம். ஆனால் நம்முடைய கடன் விகிதம் 26.40 சதவீதம்தான். ஆக நிதிக்குழு வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்" என்று பட்டவர்த்தனமாக கூறினார். மொத்தத்தில் இருதரப்பும் எடுத்துவைத்த விவாதங்கள் அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் இருந்தது.