< Back
தலையங்கம்
காசியில் பாரதியாருக்கு புகழ் சேர்க்க போட்டா போட்டி !
தலையங்கம்

காசியில் பாரதியாருக்கு புகழ் சேர்க்க போட்டா போட்டி !

தினத்தந்தி
|
3 Dec 2022 12:33 AM IST

காசியில் பாரதியார் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்க ஒரு பெரும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வாரணாசி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள காசியை 'வாரணாசி' என்றும், 'பனாரஸ்' என்றும் அழைக்கிறார்கள். இந்துக்களின் புண்ணிய பூமி காசி. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருந்திருக்கிறது. 1615-ம் ஆண்டு பிறந்து 1688-ல் மறைந்த குமரகுருபர சுவாமிகள், சைவ சித்தாந்த மடத்தை காசியில் நிறுவினார். கங்கை கரையிலேயே மறைந்தார். அங்கு மொகலாய பேரரசர் ஷாஜகானின் மகன் தாராஷுகோ இந்து சமய ஆராய்ச்சிக்காக, காசியில் நடத்திய மாநாட்டில் குமரகுருபரர், சைவ சித்தாந்தம் பற்றி சிங்கம்போல கர்ஜித்து உரையாற்றியதைக் கண்டு மனம் மகிழ்ந்து, அந்த இளவரசர், காசி கேதாரமடத்தில் ஒரு மடம் அமைக்க நிலம் வழங்கினார். குமாரசாமி மடம் என்னும் அந்த சைவ மடம் இன்னும் இருக்கிறது.

இதுபோல, நாட்டுக்கோட்டை நகரத்தார் கட்டிய சத்திரமும் இருக்கிறது. காசியில் இன்றும் தலைமுறை தலைமுறையாக பல தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் இருந்து காசி சென்று 5-வது தலைமுறையாக வாழும் குடும்பத்தை சேர்ந்த கே.வெங்கடரமணி கனபாடிகள், இப்போது முதன்முறையாக காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினராக செயல்படுகிறார். 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழும் காசியில், வாரணாசி மாவட்ட கலெக்டராக கடையநல்லூரை சேர்ந்த தமிழர் ராஜலிங்கம் பணியாற்றுகிறார்.

அங்குள்ள அனுமன்காட் தமிழர்கள் வாழும் பகுதியாகும். இங்குதான் மகாகவி பாரதியார் தன் சொந்த அத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரது அத்தையின் மகனுக்கும், பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாளுக்கும் திருமணமாகியிருந்தது. காசியில் 9-வது வகுப்பில் சேர்ந்த பாரதியார் பள்ளிக்கூடத்துக்கு சென்று படித்ததற்கு மேலாக, கங்கை கரையிலுள்ள பல்வேறு மாநில மக்களுடன் பழகி பல மொழிகளை கற்றுக்கொண்டார். 4 ஆண்டுகள் காசியில் வாழ்ந்தபோதுதான் 'வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்...', 'பாருக்குள்ளே நல்ல நாடு...' என்பதுபோன்ற பல கவிதைகளை எழுதினார்.

பாரதியார் வாழ்ந்த வீட்டில் இப்போது அவரது தங்கையின் மகனான 98 வயது கே.வி.கிருஷ்ணன், தன் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். அனுமன்காட் பகுதியில் ஏற்கனவே பாரதியாரின் மார்பளவு சிலை இருக்கிறது. இப்போது பாரதியாரின் உறவினர்களோடு தமிழக அரசு பேசி, பாரதியார் வாழ்ந்த வீட்டிலுள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அதை நினைவிடமாக மாற்றும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தமிழக செய்தித்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று ஏற்பாடுகளை செய்தார். அங்கு பாரதியாருடைய சிலையும், அவரது படைப்புகளையும் காட்சியாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசாங்கத்தின் துணையோடு உத்தரபிரதேச மாநிலமும் சில நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டுள்ளது.

பாரதியார் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்க ஒரு பெரும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் அறிவித்துள்ளார். அங்கு பாரதியாரின் இலக்கிய படைப்புகள் 'டிஜிட்டல்' முறையில் நவீனமயமாக்கப்படவும், அங்கு வருபவர்கள், தங்கள் மாநில மொழியிலேயே பாரதியாரைப் பற்றி 'ஆடியோ' மூலம் அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட இருக்கிறது. கீழ்தளத்தில் இதற்கு தேவையான இடத்தை பாரதியார் குடும்பத்திடம் கேட்டுப்பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜலிங்கம் கூறினார். பாரதியாருக்கு புகழ் சேர்க்க இரு மாநிலங்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிக்கிறது. ஆளுக்கு ஒரு முயற்சி என்பதைவிட, இரு முயற்சிகளும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

மேலும் செய்திகள்