< Back
தலையங்கம்
CM M.K.Stalin who brought investments!
தலையங்கம்

முதலீடுகளை அள்ளிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தினத்தந்தி
|
16 Sept 2024 6:46 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 நிறுவனங்களோடு, 19 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார்.

சென்னை,

17 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிகளை உருவாக்க, புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி உள்நாட்டு தொழில் அதிபர்களையும், வெளிநாடுகளின் தொழில் அதிபர்களையும் சந்தித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ 9.74 லட்சம் கோடி முதலீட்டில் 31 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். 46 புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அவருடைய முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். இது 17 நாட்கள் சுற்றுப்பயணமாகும். கடந்த மாதம் 27- ந் தேதி இரவில் சென்னையில் இருந்து புறப்பட்டார். அவர் தலைமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் அமெரிக்கா சென்றனர். விமானத்தில் இருந்து சான்பிரான்சிஸ்கோவில் இறங்கியவுடனேயே முதல் நாளிலேயே தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதில் பல முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே பேசும்போது, வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள், உங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தமிழ்நாடு காத்து இருக்கிறது என்று கூறியது அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. முதல் நாளிலேயே 6 நிறுவனங்கள் ரூ.900 கோடி மதிப்பீட்டில் சென்னை, கோவை, மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் நிறுவனங்களைத் தொடங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சான்பிரான்சிஸ்கோவிலும் சரி அடுத்து சென்ற சிகாகோவிலும் சரி முதல்-அமைச்சர் தினமும் பல்வேறு நிறுவன அதிபர்கள், உயர் அதிகாரிகளை சந்திப்பதும், அவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையினால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் என்றே நாட்கள் கழிந்தன. குறிப்பாக கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன பிரதிநிதிகளுடன் பேசி தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய அழைப்பு விடுத்தார். இதில் கூகுள் நிறுவனம் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த பயணத்தின் மிகப்பெரிய வெற்றி என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு அருகில் இருந்த போர்டு கார் கம்பெனி மூடப்பட்டு இருந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக மீண்டும் அதை திறக்க போர்டு நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இது முதல்-அமைச்சரின் பயணத்தின் வெற்றி மகுடமாகும்.

இந்த 17 நாள் சுற்றுப்பயணத்தில் முதல்-அமைச்சர் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல், எந்த இடத்துக்கும் சுற்றுலா செல்லாமல் அத்தனை நாட்களும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதே தன் லட்சியம் என்று செயல்பட்டதால் 18 நிறுவனங்களோடு, 19 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார். இதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கையெழுத்திட்ட அத்தனை நிறுவனங்களும், பார்ச்சூன் 500 நிறுவனங்களாகும். எனவே அந்த நிறுவனங்கள் நிச்சயமாக தொழில் தொடங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மொத்தத்தில் முதல்-அமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல, சாதனை பயணம், முத்திரை பதித்த பயணம். தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சிக்கு அழைத்து செல்லும் பயணமாகும்.

மேலும் செய்திகள்