சென்னையில் நடக்கும் ஆக்கி திருவிழா!
|சர்வதேச ஆக்கி போட்டிகளை இந்தியாவில் ஒடிசாவில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் நடத்தலாம் என்ற எண்ணத்தை உலக அரங்கில் ஏற்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் வெற்றிகரமாக நடத்தி, அதில் பங்குகொண்ட பல்வேறு நாட்டு வீரர்களும், நிர்வாகிகளும், இன்னும் அந்த இனிய நினைவுகளை நெஞ்சில் சுமந்து இன்புறுகிறார்கள். ஏதோ ஒரு சர்வதேச போட்டியை நடத்தினோம், அதையும் வெற்றிகரமாக நடத்தினோம் என்று, திருப்தி அடைவதோடு விட்டுவிடாமல், அடுத்தடுத்து என்னென்ன போட்டிகளை நடத்தலாம் என்ற தீவிர முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், விளையாட்டு வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்ட உதயநிதி ஸ்டாலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வைத்தார். உதயநிதி ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வழங்கிய பங்களிப்புதான், அவரை இந்த பொறுப்புக்கு அடையாளம் காண வைத்தது. இந்த நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டி இந்தியாவில் நடக்கப்போகும் நிலையில், எந்த மாநிலத்தில் நடத்துவது? என்ற கேள்வி எழுந்தது. ஆக்கி விளையாட்டு என்றாலே, இந்தியாவில் அதன் தலைநகரம் ஒடிசா என்று சொல்லக்கூடிய அளவில், அம்மாநிலம் ஆக்கி விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அங்கு மட்டும் சர்வதேச தரத்திலான 3 ஆக்கி மைதானங்கள் இருக்கின்றன. தேசிய அளவிலும், சர்வதேச தரத்திலும் ஆக்கி வீரர்களை உருவாக்கவேண்டும் என்று ஒடிசா அரசாங்கம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
இந்திய ஆக்கி அணியில் எப்படியும் 3 அல்லது 4 வீரர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பல உலக, சர்வதேச ஆக்கி போட்டிகள் ஒடிசாவில் நடந்து இருக்கின்றன. அங்கு உலக ஆக்கி போட்டி நடந்த நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியையும், அங்கேயே நடத்த முடிவு எடுக்கப்பட இருந்த நேரத்தில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த போட்டியை எப்படியும் சென்னையில் நடத்தவேண்டும் என்று மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார். ஒடிசா சென்று அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். சர்வதேச ஆக்கி சம்மேளனம், ஆசிய ஆக்கி சம்மேளன தலைவர்களையும் சந்தித்து பேசினார். இந்த போட்டியை சென்னையில் நடத்தவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து அவர் விடுத்த வேண்டுகோள் வெற்றி அடைந்தது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியம் இப்போது ரூ.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மிளிர்கிறது. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த சர்வதேச ஆக்கி திருவிழாவில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 நாடுகள் கலந்துகொள்கின்றன. 12-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி நேற்று தொடங்கியது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக உள்ள இந்திய அணியில், அரியலூரை சேர்ந்த 21 வயது கார்த்தி செல்வம் விளையாடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை அளிக்கிறது.
ஆசிய விளையாட்டு, பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், சென்னையில் நேற்று தொடங்கிய இந்த போட்டி சர்வதேச அளவில் பார்வையை ஈர்க்கும் என்ற வகையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சர்வதேச ஆக்கி போட்டிகளை இந்தியாவில் ஒடிசாவில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் நடத்தலாம் என்ற எண்ணத்தை உலக அரங்கில் ஏற்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்.