காத்து இருக்கும் சவால்கள்!
|ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடக தேர்தல் முடிவுகள் மீது தன் பார்வையை வைத்துக்கொண்டிருந்த நிலையில், இதுவரை கர்நாடகத்தில் எந்த கட்சியும் பெறாத வகையில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, அதிக ஓட்டு சதவீதத்தையும் பெற்ற கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 135 இடங்களில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ் 42.88 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறது. 2018 சட்டசபை தேர்தலைவிட இது 4.80 சதவீதம் அதிகம். அதுபோல 66 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. 36 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 0.26 சதவீதம் மட்டுமே குறைவு. 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற மத சார்பற்ற ஜனதா தளம் 13.29 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 5.02 சதவீதம் குறைவு. இந்த வாக்குகளே காங்கிரசுக்கு போயிருக்கிறது.
கடந்த 5 மாதங்களில் இமாசலபிரதேசத்திலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை தோற்கடித்துள்ளது. தொடர்ந்து இந்தாண்டு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கர்நாடகா தேர்தல் முடிவுகள் அந்த மாநிலங்களில் எதிரொலிக்குமா? என்பது அங்கு தேர்தல் முடிவுகள் வந்தபிறகே தெரியும். மேலும் சட்டசபை தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உண்டென்றும் சொல்லலாம், இல்லையென்றும் சொல்லலாம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், அதற்குபிறகு 6 மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறும் இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்காக, தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை பிரசாரம் செய்த பல தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதுபோல முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரசுக்காக தேர்தல் பணியாற்றினார். கிராமப்புறங்களில் காங்கிரசுக்கு அதிக வாக்குகளும், நகர்ப்புறங்களில் பா.ஜ.க.வை விட ஒரு சதவீதம் காங்கிரசுக்கு அதிகமாகவும் கிடைத்திருக்கிறது. படிக்காதவர்களில் இருந்து பள்ளி இறுதி படிப்பு வரை படித்தவர்கள் வரை காங்கிரசுக்கு அதிகமாகவும், பட்டதாரிகள் பா.ஜ.க.வுக்கு அதிகமாகவும் வாக்களித்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு வறுமையாலும், விலைவாசி உயர்வினாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் அவதிப்பட்ட கிராமப்புற ஏழை-எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும் ஈர்ப்பை அளித்தது.
குறிப்பாக 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 என்று 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும், பெண்களுக்கு மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை என்று 5 வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, இவையெல்லாம் மந்திரிசபையின் முதல் கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் இந்த மந்திரிசபை கூட்டத்தையே எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடி அரசுக்கு செலவாகும். அந்தளவுக்கு வருமானம் அதிகரித்தால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும். ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனேயே இந்த 5 சவால்களையும் காங்கிரஸ் அரசாங்கம் எப்படி சமாளிக்க போகிறது? என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.