< Back
தலையங்கம்
மிக்ஜம் மழை சேதத்துக்கு மத்திய அரசாங்கம் உதவி!
தலையங்கம்

மிக்ஜம் மழை சேதத்துக்கு மத்திய அரசாங்கம் உதவி!

தினத்தந்தி
|
10 Dec 2023 7:46 PM GMT

அக்டோபர் மாதம் 1-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 29-ந்தேதி வரை சென்னையில் 21 சதவீதம் மழை பற்றாக்குறை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மதிப்பிட்டு இருந்தது.

அக்டோபர் மாதம் 1-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 29-ந்தேதி வரை சென்னையில் 21 சதவீதம் மழை பற்றாக்குறை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மதிப்பிட்டு இருந்தது. ஆனால், 3, 4-ந்தேதிகளில் பெய்த மிக்ஜம் புயல் மழையினால் 5-ந்தேதி காலை சராசரி மழையைவிட 54 சதவீதம் அதிக மழை என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு பெய்த மழையைவிட அதிக மழை பெய்தது. 2015-ல் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 29.4 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. ஆனால், மிக்ஜம் மழையினால் நுங்கம்பாக்கத்தில் 47 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 43 செ.மீ. மழையும் பதிவாகியிருந்தது.

இந்த மழை எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தண்ணீர்-தண்ணீர் எங்கு நோக்கினும் தண்ணீர் என்று சொல்லக்கூடிய அளவில், சென்னை நகரம் முழுவதுமே கடல் போல காட்சியளித்தது. தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது இடைக்கால நிவாரணம்தான். சேத விவரங்களை கணக்கிடும் பணி இப்போது தொடங்கியுள்ளது. முழு விவரம் சேகரிக்கப்பட்ட பிறகு விரிவான சேத அறிக்கை தயாரிக்கப்பட்டு கூடுதல் நிதி கோரப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய அரசாங்கம் மழை சேதத்துக்காக ரூ.450 கோடியும், மற்றொரு நிதியில் இருந்து ரூ.561 கோடியும் வழங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த இரு தொகைகளும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் ஏற்கனவே தர வேண்டியது. இந்த மிக்ஜம் புயல் வெள்ளத்துக்காக, பிரத்யேகமாக தரப்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆண்டுதோறும் இரு தவணைகளில் வறட்சி, புயல், மழை போன்ற பேரிடர் நிவாரண நிதியாக இரு தவணைகளில் மத்திய அரசாங்கம் நிதி தருகிறது. இந்த நிதியில், முதல் தவணையாக கடந்த ஜூலை மாதம் ரூ.450 கோடி வழங்கப்பட்ட நிலையில், இப்போது 2-வது தவணையாக ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடியும் இந்த மாத இறுதியில் வழங்கப்படுவதற்கு பதிலாக, முன்கூட்டியே பிரதமர் நரேந்திரமோடியால் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, 2015-ம் ஆண்டு பெய்த பெரு மழை வெள்ளத்துக்காக 15-வது நிதிக்குழு சென்னை வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தீட்டியது. ரூ.561 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பு ரூ.500 கோடியாகும். அந்த திட்டத்துக்கும் பிரதமர் நரேந்திரமோடி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஆக, இந்த இரு தொகைகளும் பழைய பாக்கிதான். மிக்ஜம் புயல் வெள்ளத்துக்கு மத்திய அரசாங்கத்தின் உதவி, இன்று வரும் மத்தியக்குழு சேத பகுதிகளை பார்வையிட்ட பிறகு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தும். பின்பு ஒரு வாரத்துக்குள் மத்திய அரசாங்கத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் மத்திய அரசாங்கம் மிக்ஜம் புயல் வெள்ளத்துக்கு நிதி ஒதுக்கும்.

இப்போது ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை மத்திய அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும், தாராளமாக நிதி ஒதுக்கவேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்