மக்கள் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் !
|பா.ஜனதா அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? என்று ஆவலோடு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை,
இதுவரை தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்த மக்கள், இப்போது 3-வது முறையாக பதவி ஏற்றிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் வருகிற 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதுடன், தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி மந்திரி என்ற பெருமையையும் பெற இருக்கிறார்.
இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், அவர் தொடர்ந்து 6 முறைதான் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் என்ற அடிப்படையில் ப.சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் தாக்கல் செய்திருக்கிறார்கள். நிர்மலா சீதாராமனுக்கு மற்றொரு பெருமையும் உண்டு. கடந்த 2019-ம் ஆண்டு நிதி மந்திரியாக பொறுப்பேற்ற அவர் நாட்டின் முதல் முழுநேர நிதி மந்திரி என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.
இந்த பட்ஜெட் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவு வரும் முன்பே பிரதமர் மோடி உயர் அதிகாரிகளை அழைத்து புதிய அரசாங்கத்துக்காக 100 நாள் செயல்திட்டத்தை வகுக்க சொல்லியிருந்தார். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள வாக்குறுதிகளும் இந்த 100 நாள் செயல்திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலும், அதற்கு முன்பு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், "2.83 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவை வரும் 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்த்துவோம்" என்று சூளுரைத்து இருந்தார்.
ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் இப்போது 3.9 டிரில்லியன் டாலர் இலக்கைதான் எட்ட முடிந்தது. எனவே, குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் பல பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தயாரிப்புக்கு முன் சமுதாயத்தின் 10 பிரிவுகளை சேர்ந்த 120 நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடியும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல் துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வருமான வரியில் சலுகைகள், வேலைவாய்ப்பு, ஓய்வூதிய திட்டத்தில் பல சீர்திருத்தங்கள், நிதி பற்றாக்குறையை குறைத்தல், உற்பத்தி நிறுவனங்களுக்கான சலுகைகள், தனியார் முதலீட்டை ஊக்குவித்தல், தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சியை ஊக்குவித்தல், ஏழ்மையை விரட்டுதல் ஆகியவற்றை மையமாக வைத்தே இந்த பட்ஜெட் இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.
மக்களிடம் வாங்கும் திறனை அதிகரித்தால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதற்கு மக்கள் கையில் பணம் இருக்க வேண்டும். அந்தவகையில், வருமான வரியில் பல சலுகைகளை கொடுத்தால் மக்கள் கையில் பணம் இருக்கும் என்பதால், அந்த சலுகைகளை முக்கியமாக பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறார்கள். இதேபோல, தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும், நிறுவனங்களுக்கான வரிகளை குறைக்கவேண்டும் என்பதும் தொழில்துறையினரின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் பட்ஜெட்டாக இருக்கும், இருக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.