கிராமங்களில் பணப்புழக்கம்!
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று கூறப்படும் இந்த திட்டம், பெண்களின் கையில் கூடுதலாக ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளது.
எல்லா குடும்பங்களிலும், அது வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, வசதி இல்லாத அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும் சரி, வீடுகளில் சேமிப்பு என்பது அதிக முக்கியமானது. சேமிப்பு இருந்தால்தான் அவசர நேரங்களில் செலவழிக்க முடியும். வருமானம் குறைந்த நேரங்களில் வீட்டு செலவுகளுக்கும் பயன்படுத்த முடியும். சாதாரண ஏழை, எளிய குடும்பங்களுக்கு இதுபோல வருமானத்துக்கு அதிகமான செலவுகளுக்கு இந்தத் தொகை பெரிதும் உதவும்.
ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், இந்திய மக்களின் குடும்ப சேமிப்பு, கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிதும் குறைந்து இருக்கிறது என்று கண்டறியப்பட்ட செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு மக்களின் வருமானம் பெருமளவில் குறைந்து இருக்கிறது. ஏற்கனவே, இருந்த சேமிப்புகளெல்லாம் கொரோனா நேரத்தில் கரைந்துவிட்டது. மேலும், இப்போது பெருகிவரும் பணவீக்கத்தால் விலைவாசிகளெல்லாம் அதிகரித்து, வருமானத்துக்கு உள்ளே செலவுகள் இல்லாமல், கடன் வாங்கி செலவழிக்க வேண்டிய நிலையில், சேமிப்பை கனவில்கூட நினைக்க முடியாது என்கிறார்கள் பல குடும்பத்தினர்.
தமிழ்நாட்டிலும் அதே நிலை இருந்தாலும், இந்த பள்ளத்தில் இருந்து கை தூக்கிவிட அரசின் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. இதுபோன்ற நேரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது இல்லத்தரசிகள்தான். அவர்களுக்கு அரசு செய்யும் உதவி, அந்த குடும்பத்துக்கே மனநிறைவு தரும். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனேயே பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், உடனடியாக அமலுக்கும் கொண்டுவந்தார். இதனால் பெண்கள் நாள்தோறும் பஸ்களில் டிக்கெட்டு எடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலையில்லாமல், இலவச பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு இது இலவச விடியல் பயணம். ஒவ்வொரு பெண்ணும் இந்த இலவச பஸ் பயணத்தால் மாதம் ரூ.800 முதல் ரூ.1200 வரை சேமிக்க முடிவதால், அந்த தொகையைக்கொண்டு வேறு பல முக்கிய செலவுகளை அவர்களால் சமாளிக்க முடிகிறது. கையில் உள்ள இந்த தொகையை வைத்து தாங்கள் விரும்பிய, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடிகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது.
பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவது போல, இப்போது ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று கூறப்படும் இந்த திட்டம், பெண்களின் கையில் கூடுதலாக ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளது. இதனால், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களில் களிப்பும், அவர்கள் முகங்களில் மலர்ச்சியும் காணப்படுகிறது. குக்கிராமங்களில் கூட, ஏறத்தாழ 300 பெண்களுக்கு இந்த தொகை கிடைத்து இருப்பதால், அந்த கிராமத்தில் மாதம் ரூ.3 லட்சம் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருக்கிறது. அங்குள்ள சிறிய கடையில் கூட வியாபாரம் அதிகரித்து இருக்கிறது. சாதாரண தள்ளு வண்டியில் கூட இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அன்றாட விற்பனையை பெருக்கியிருக்கிறது. இந்த தொகைகளோடு அரசு பள்ளிக்கூடங்களில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதும் சேர்ந்து பணப்புழக்கத்தை அதிகரித்து இருப்பதோடு, மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார மாற்றங்களையும் மலரச் செய்துள்ளது.