< Back
தலையங்கம்
தாங்க முடியுமா மருந்து விலை உயர்வை?
தலையங்கம்

தாங்க முடியுமா மருந்து விலை உயர்வை?

தினத்தந்தி
|
30 March 2023 1:15 AM IST

ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந்தேதி நெருங்குகிறது என்றால், மத்திய அரசாங்கம் அறிவித்த வரி உயர்வுகளெல்லாம், பல சலுகைகள் நிறுத்தம் எல்லாம் அமலுக்கு வந்துவிடுமே என்ற கலக்கம் பொதுமக்களுக்கு இருக்கும். அந்தவகையில், இப்போது மருந்து விலைகளெல்லாம் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் உயரப்போகிறது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மருத்துவச்செலவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதுவும் முதியோர்களுக்கு அனைத்து இணைநோய்களும் குறிப்பாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய் உள்பட பல நோய்களுக்கு மருந்துகள் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருப்பதால் அது பெரும் செலவை ஏற்படுத்திவிடுகிறது.

பச்சிளங்குழந்தைகள் முதல் தள்ளாத வயதில் உள்ள ஆணோ, பெண்ணோ யார் என்றாலும் சரி மருத்துவ செலவுகளை தவிர்க்கவே முடியாது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டாலும் எல்லா மருந்துகளுக்கும் அதையே நம்பி இருக்கமுடியாது. முக்கியமாக தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லும்போது அவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை மருந்துக்கடைகளுக்கு சென்று விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டியது இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வலி நிவாரணிகள், தொற்று தடுப்பு மருந்துகள், இதய நோய்களுக்கான மருந்துகள், 'ஆண்டிபயாடிக்'குகள் உள்பட அத்தியாவசிய மருந்துகளின் விலையெல்லாம் உயரப்போகிறது. அதுவும் 12 சதவீதத்துக்கு மேல் உயரப்போகிறது.

27 வகையான சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகளைக்கொண்ட 900 மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகளின் விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது. தேசிய பட்டியலில் இந்த மருந்துகளெல்லாம் மிகவும் அத்தியாவசிய மருந்துகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மொத்த விற்பனை விலை குறியீடு எண் கடந்த 2022-ம் ஆண்டில் அரசு அறிவித்தபடி 12 சதவீதமாக இருக்கிறது என்று, இந்த விலை உயர்வுக்கு மருந்து கட்டுப்பாடு அமைப்பான தேசிய மருந்து விலை நிர்ணயிக்கும் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல விலை கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விலை உயர்வு ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரையே இருந்திருக்கிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு மருந்துவிலை உயர்வு என்பது அவர்கள் மீது விழுகிற பெரிய அடியாகும். மருந்து கம்பெனிகளுக்கு அரசு மானியங்கள் கொடுத்து இதுபோல விலை உயர்வை தடுக்கலாம். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது மூத்தகுடிமக்கள்தான். வயதான காலத்தில் தங்களின் சொற்ப சேமிப்பில் கிடைக்கும் தொகையைக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தை கஷ்டப்பட்டு சுழட்டிக்கொண்டு இருப்பவர்கள் மீது அடிமேல் அடியாக விழுந்து கொண்டு இருக்கிறது. முதலில் ரெயில் கட்டண சலுகை ரத்து, அடுத்து கடன் பத்திரங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு 10 சதவீதம்தான் வருமானவரி என்ற சலுகை ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரத்து, சில வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரோக்கிய ரக்ஷா எனும் இன்சூரன்சு திட்டம் ரத்து, பொது பிராவிடண்டு நிதியில் இருந்து மிகவும் குறைவான பென்ஷன், தபால் அலுவலக சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் குறைவான வட்டி என்று பல இடிகளைத் தாங்கும் மூத்த குடிமக்களை வலியில்லாமல் வாழ மத்திய அரசாங்கம் வழிவகுக்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்