< Back
தலையங்கம்
ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்குமா?
தலையங்கம்

ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்குமா?

தினத்தந்தி
|
26 Jun 2024 6:12 AM IST

மக்களவை மக்களுக்கான அவையாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சென்னை,

18-வது மக்களவை கூடிவிட்டது. இதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரிந்துவிட்டது. இந்தமுறை பா ஜனதா தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. மூன்றில், 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் அரசியல் சட்ட திருத்த மசோதா போன்ற முக்கியமான மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால் இனி பா ஜனதாவால் நிறைவேற்றமுடியாது என்ற நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது.

நேற்று முன்தினம் மக்களவை தொடங்கியதும் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலித் உறுப்பினர் தான் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா ஜனதா உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். அது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டது. இதற்கிடையில் துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தந்தால் சபாநாயகரை போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் அதற்கு பா ஜனதா மறுத்துவிட்டது. மேலும் சபாநாயகராக, கடந்த மக்களவையில் பணியாற்றிய ஓம்பிர்லாவை வேட்பாளராக அறிவித்துவிட்டது. எனவே இந்தியா கூட்டணியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள எம்.பி. கொடிக்குனில் சுரேஷை, சபாநாயகர் வேட்பாளராக உடனடியாக அறிவித்தது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை சபாநாயகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வந்தார். இதுவரை அதற்கு தேர்தல் நடைபெறாத நிலையில், முதல் முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையில் முதல் நாள் பதவியேற்புக்காக மக்களவை கூடும் முன்பு வெளியே பிரதமர் நரேந்திர மோடி பேசியதையும், எதிர்க்கட்சிகள் செயல்பாட்டையும் பார்த்தால் அவை சுமுகமாக நடைபெறுமா? என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் பிரதமர் பேசும்போது, இதே நாளில் அதாவது 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை பெயர் சொல்லாமல் சாடினார்.

மக்கள் நல்ல நிர்வாகத்தைத்தான் விரும்புகிறார்கள், கோஷங்களை அல்ல, அவர்கள் அவையில் விவாதங்களையே எதிர்பார்க்கிறார்கள், நாடகங்களை அல்ல என்று பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் பதவி ஏற்கும்போது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர். அதற்கு பதிலடி தந்துள்ள ராகுல்காந்தி, முதல் 15 நாட்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த கோர ரெயில் விபத்து, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல், நீட் தேர்வு முறைகேடு, முதுகலை நீட் தேர்வு ரத்து, நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, பால், உணவு தானியம், கியாஸ் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு, வெப்ப அலையை சமாளிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படாததால் நேரிட்ட சாவுகள் ஆகியவை தான் பா ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனைகள் என்று வர்ணித்துள்ளார். மேலும் ராகுல்காந்தி மக்களின் குரலை அவையில் கிளப்புவோம் என்றும் கூறியிருக்கிறார். ஆக இந்த மக்களவையில் கடும் அனல் வீசும், விவாதங்களில் சூடு பறக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும். மக்களுக்கு பயன்படும் கருத்துக்கள் பரிமாறப்படவேண்டும். மக்களவை மக்களுக்கான அவையாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்