< Back
தலையங்கம்
துள்ளி வருகுது தொழில் முதலீடுகள்!
தலையங்கம்

துள்ளி வருகுது தொழில் முதலீடுகள்!

தினத்தந்தி
|
8 Sept 2023 1:33 AM IST

மகாகவி பாரதியார் எழுதிய ‘ஓம் சக்தி’ பாடலில், “துள்ளி வருகுது வேல்” என்று உள்ளம் உருக கூறியிருப்பார்.

மகாகவி பாரதியார் எழுதிய 'ஓம் சக்தி' பாடலில், "துள்ளி வருகுது வேல்" என்று உள்ளம் உருக கூறியிருப்பார். அதுபோல, தமிழ்நாட்டில் இப்போது, "துள்ளி வருகுது தொழில் முதலீடுகள்" என்று பெருமையுடனும், பூரிப்புடனும் கூறும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலம் முதல், அனைத்து முதல்-அமைச்சர்களும் தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டி வந்தார்கள். அந்த வகையில், இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளால், தொழில் வளர்ச்சியில் புதிய பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர், "2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.80 லட்சம் கோடி பொருளாதாரமாக உயர்த்திக்காட்டுவேன்" என்ற இலக்கை நிர்ணயித்து, அதை அடையும் வகையில் வேகமாக செயலாற்றிவருகிறார்.

அந்த இலக்கை அடையும் லட்சியத்தில், தமிழக அரசின் தொழில்துறை மற்றும் வழிகாட்டி நிறுவனம் மிக வேகமாக முயற்சிகளை எடுத்துவருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழில் முனைவோரை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் விஷ்ணு வேணுகோபால் ஆகியோர் தினமும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தொழில் அதிபர்களுடன் டெலிபோனிலோ, கடிதங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலைகளையும், அரசின் சார்பில் அளிக்கப்பட்டுவரும் சலுகைகள், உதவிகள், வசதிகளையும் விளக்கி வருகிறார்கள். இதுதவிர, அந்த அதிகாரிகள் குழு நேரிலும் சந்தித்து வருகிறது.

ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்பதற்கேற்ப, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதிகாரிகளும் எடுக்கும் முயற்சிகளால், தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இப்போதுவரை 4 லட்சத்து 15 ஆயிரத்து 282 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி மதிப்பிலான 241 தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த வேகத்தை புலிப்பாய்ச்சலாக்கி, மேலும் ஏராளமான முதலீடுகளை அள்ளிக் குவிக்கவேண்டும் என்ற முனைப்பில், சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7, 8-ந்தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீள் திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் மாநாட்டின் கருப்பொருளாகும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த மாநாட்டுக்கான இலச்சினை, அதாவது லோகோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். இந்த லோகோ தமிழ், தமிழர் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றைக் குறிக்கும்விதமாக, தமிழ் எழுத்தான 'த' வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் மயமாக்கல், தொழில் மயமாக்கல், நகர மயமாக்கப்பட்ட சமூகம், மற்றும் அதிவேக தொழில் வளர்ச்சிகளை குறிக்கும் வண்ணங்களுடன் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கவும் முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த முயற்சிகளால் மாநில பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடையும். இப்படி தொழில்துறை எடுக்கும் வேகமான முயற்சிகளைப்பார்த்தால், தமிழ்நாட்டுக்குள் ஏராளமான தொழில் முதலீடுகள் அலை அலையாய் வரப்போவது உறுதி என்றே தெரிகிறது.

மேலும் செய்திகள்