< Back
தலையங்கம்
இவர்களால் நாட்டுக்கும் பெருமை; விருதுக்கும் பெருமை
தலையங்கம்

இவர்களால் நாட்டுக்கும் பெருமை; விருதுக்கும் பெருமை

தினத்தந்தி
|
19 Feb 2024 5:45 AM IST

இந்த ஆண்டு ஐம்பெரும் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை மறக்காமல் கவுரவிப்பது இந்தியாவின் பண்பு. அந்தவகையில், மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், 'பாரத ரத்னா' விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். இந்த ஆண்டு ஐம்பெரும் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த சமூக சீர்திருத்தவாதியான மறைந்த கர்பூரி தாக்கூர், பா.ஜனதா தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய 96 வயது எல்.கே.அத்வானி, மறைந்த பிரதமர் சவுத்ரி சரண்சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

64 வயது வரையே வாழ்ந்த கர்பூரி தாக்கூருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில், 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவது மிகப்பெரிய கவுரவமாகும். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாகும். அது பீகாரில் இப்போது நிறைவேறியிருக்கிறது. இதுபோல, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடித்தளமிட்டவர் எல்.கே.அத்வானி. பா.ஜனதாவின் வளர்ச்சிக்கும் அவரது பங்கு மிக மிக முக்கியமானதாகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதற்காக ரத யாத்திரை நடத்தியவர். அது நிறைவேறியுள்ள நிலையில் பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் பிறந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், விவசாய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர். அம்மாநிலத்தில் 2 முறை முதல்-மந்திரியாகவும், மந்திரியாகவும் இருந்துள்ளார். அங்கு செய்யப்பட்ட நிலச்சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு அவருக்குண்டு.

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், ஆந்திராவின் முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவை உலகளாவிய சந்தைகளுக்கு திறந்து, பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், 1925-ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார். மரபணு மாற்றப்பட்ட கோதுமை, நெல் மூலம் பசுமைப்புரட்சியை கொண்டுவந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் கமிஷன் 2007-ல் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவோடு 1½ மடங்கு விலை, விளைபொருட்களுக்கு நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.

இந்த ஐம்பெரும் தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கியதில் பா.ஜனதாவுக்கு அரசியல் லாபமும் இருக்கிறது. கர்பூரி தாக்கூருக்கு கொடுத்ததால் பீகாரில் ஆதரவு அலை இருக்கும். சரண் சிங்குக்கு விருது அறிவித்த அடுத்த நாளே, சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சிங் சவுத்ரி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, தனது கட்சியான ராஷ்டிரிய லோக்தளத்தை பா.ஜனதா தலைமையிலான கூட்டணியோடு இணைப்பதாக அறிவித்துவிட்டார். மேற்கு உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வாழும் சரண்சிங்கின் ஜாட் இனத்தின் அபிமானம் இனி பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.

நரசிம்மராவுக்கு காங்கிரஸ் கட்சி உரிய மரியாதையை அவர் இறந்த பிறகும் கொடுக்கவில்லை என்ற குறைபாடு ஆந்திர-தெலுங்கானா மக்களுக்கு உண்டு. அங்கும் பா.ஜனதாவுக்கு இனி நல்ல பெயர் கிடைக்கும். எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது வழங்கியதில் தமிழர்களுக்கும் பெருமை. ஆக, எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும், இந்த ஐம்பெரும் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதால், அவர்களின் புகழுக்கும் பெருமை. அந்த விருதுக்கும் பெருமை. பா.ஜனதாவுக்கும் அரசியல் லாபம்.

மேலும் செய்திகள்