தொழில் புரிய உகந்த மாநிலம்!
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-2031-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, அதாவது ரூ.78 லட்சம் கோடி பொருளாதாரமாக வளர்ச்சி அடைய செய்யவேண்டும் என்பதையே தன் லட்சியமாகக் கொண்டு, அன்றாடம் அதை நோக்கியே காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்த இலக்கு பொருளாதார வளர்ச்சியடைய, உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகித்தால் மட்டுமே சாத்தியமாகும். தமிழ்நாடு அதற்குரிய வலுவான உற்பத்தி சூழல் அமைப்பினை கொண்டுள்ள மாநிலமாகவே திகழ்கிறது.
இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட, தொழில் புரிய உகந்த மாநிலங்களின் தரவரிசை பட்டியலே நிரூபித்துவிட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 301 தொழில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதை, மத்திய அரசாங்க தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செய்த மதிப்பீட்டில் 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 14-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது ஆந்திரா, குஜராத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதற்காக, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ரூ.78 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ரூ.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படவேண்டும். 46 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.
இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமை வாய்ந்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சிறு தொழில்துறை முதன்மை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி ஆகியோர் கொண்ட ஒரு அணியை களத்தில் இறக்கியுள்ளார். தொழில் முனைவோரை ஈர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை 6 தொழில் நிறுவனங்களோடு கையெழுத்திட்டு, வெற்றிப் பயணம் சென்று திரும்பியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 14,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
கடந்த 1-ந்தேதிகூட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.எஸ்.எஸ். வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கும், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கும் இடையே 300 ஏக்கர் பரப்பளவில் கம்ப்யூட்டர், செல்போன், மோட்டார் வாகனம் போன்றவைகளின் உற்பத்திக்கு தேவையான "செமி கண்டக்டர்" உயர் தொழில் நுட்ப பூங்காவை அமைப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.25,600 கோடி முதலீடு கிடைக்கும். 1500 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தமிழக அரசின் சார்பில் ரூ.94,975 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 132 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.26 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த 132 நிறுவனங்களில் 78 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டன. மற்ற நிறுவனங்களையும் உடனடியாக தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்று சென்னையில் நடக்கும் தொழில் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கிறது. 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 12 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சில நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருக்கிறது, ஏற்கனவே கையெழுத்திட்ட நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். தொழில் வளர்ச்சியில் தமிழக அரசின் வேகம் பாராட்டுக்குரியது. ரூ.78 லட்சம் கோடி பொருளாதார இலக்கை அடைய தமிழக அரசின் தொழில் துறை செல்லும் அதிவேக பயணம் வேகம்.. வேகம்.. மேஜிக் வேகம்.. என்று சொல்லும்படியே இருக்கிறது.