< Back
தலையங்கம்
மத நல்லிணக்கத்தை மலரச்செய்யப் போகிறது அயோத்தி !
தலையங்கம்

மத நல்லிணக்கத்தை மலரச்செய்யப் போகிறது அயோத்தி !

தினத்தந்தி
|
20 Jan 2024 5:15 AM IST

அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் இடத்திலும் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு மசூதி கட்டும் பணிகள் தொடங்க இருக்கின்றன.

எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேமும், முஸ்லிம்களுக்கு மெக்கா - மதினாவும் புண்ணிய பூமியோ, அதுபோல இந்துக்களுக்கு புண்ணிய பூமியாக, உலகளாவிய ஆன்மிக தலமாக உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி உருவாகப்போகிறது. நீண்ட நெடுங்காலமாக இது ராமர் அவதரித்த இடம் என்று இந்துக்களும், பாபர் மசூதி என்று முஸ்லிம்களும் கூறிவந்த நிலையில், இந்த விவகாரம் பல்வேறு நீதிமன்றங்களில் தீர்வைகாண முடியாமல், இறுதியில் சுப்ரீம் கோர்ட்டு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிகிடைத்தது. முஸ்லிம்களுக்கு அயோத்தியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தன்னிபூர் என்ற கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டும் பணியினை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். மொத்தம் 70 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கரில் ராமர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் கட்டப்படுகின்றன. மீதமுள்ள 63 ஏக்கர் நிலம் பசுமைப் பகுதியாக உருவாக்கப்படுகிறது. கருவறையில் 51 அங்குல, 5 வயதுடைய பால ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ராமர் தர்பாரும், அதில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளும் வைக்கப்படுகின்றன.

இந்த கோவிலில் பிரதிஷ்டை வருகின்ற 22-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கிறது. இதில் மத நல்லிணக்கம் என்னவென்றால், அயோத்தி கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்ட இக்பால் அன்சாரி என்ற இஸ்லாமியரே, சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி அயோத்திக்கு வந்தபோது ரோஜா இதழ்களை தூவி வரவேற்றார். அயோத்தி கோவில் பிரதிஷ்டையிலும் கலந்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதுதான் இந்தியா. இதேபோல, மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் இடத்திலும் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு மசூதி கட்டும் பணிகள் தொடங்க இருக்கின்றன.

இதற்கான கட்டுமானப் பணிகளை இந்திய - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை மேற்பார்வையிடுகிறது. இந்த புதிய மசூதி மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக மராட்டியத்திலுள்ள பா.ஜனதா தலைவர் அரபத் ஷேக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மசூதி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைவிட பெரியதாக அமையப்போகிறது. இந்த வளாகத்தில் ஒரு மருத்துவமனை, சமுதாய சமையல் கூடம், நூலகம், ஆராய்ச்சி மையம் இருக்கும். எல்லாவற்றையும்விட மிகச் சிறப்பு என்னவென்றால், உலகத்திலேயே மிகப்பெரிய குரான் புனித நூல் 21 அடி உயரம், 35 அடி அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தியாவிலேயே 5 ஸ்தூபிகளைக் கொண்ட ஒரே மசூதி இதுவாகத்தான் இருக்கும். இந்த கட்டுமானப் பணியில் முதலில் வைக்கப்போகும் செங்கல்லில், திருக்குரானிலுள்ள வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும். அது சவுதி அரேபியாவிலுள்ள மதினாவுக்கும், இந்தியாவிலுள்ள பெரிய மசூதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்ட பிறகு நிறைவாக அடிக்கல் நாட்டுவதற்காக வைக்கப்படும்.

இந்த புகழ்பெற்ற மசூதியின் பெயர் முகமது பின் அப்துல்லா மஸ்ஜித். இந்த மசூதி கட்ட நன்கொடை வசூலிப்பதற்காக அடுத்த மாதம் இறுதியில் ஒரு இணையதளம் தொடங்கப்பட இருக்கிறது. அயோத்தி மாவட்டத்திலேயே இந்துக்களின் ஆன்மிக தலமும், முஸ்லிம்களின் புகழ்பெற்ற மசூதியும் இருப்பது மிகவும் சிறப்பாகும். இனி அயோத்தியில் ராமர் கோவிலுக்கும், மசூதிக்கும் மக்கள் ஒரே சமயத்தில் சென்று வரப்போகும் நாள் தூரத்தில் இல்லை. மத நல்லிணக்க பூமியாக மாறப்போகிறது, அயோத்தி.

மேலும் செய்திகள்