< Back
தலையங்கம்
இனி கிராமங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் வருவார்கள்..!
தலையங்கம்

இனி கிராமங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் வருவார்கள்..!

தினத்தந்தி
|
7 Feb 2024 12:16 AM IST

தமிழ்நாடு, 'கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தி, மகத்தான சாதனையை படைத்துள்ளது.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டுவரும் தமிழ்நாட்டில், விளையாட்டுத் துறையிலும் இப்போது மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டின் தலைநகராக மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். செஸ் ஒலிம்பியாட், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டி ஆகியவற்றை நடத்தி முத்திரை பதித்த தமிழ்நாடு, இப்போது 18 வயதுக்குட்பட்டோருக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தி, மகத்தான சாதனையை படைத்துள்ளது.

'கேலோ இந்தியா' என்றால் 'விளையாடு இந்தியா' என்று பொருள். விளையாட்டில் இளம் வீரர்கள், வீராங்கனைகளின் திறமைகளை கண்டறிந்து, அவர்கள் சாதிப்பதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசாங்கத்தால் 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதுதான் இந்த கேலோ இந்தியா திட்டம். ஆண்டுதோறும் நடக்கும் இந்த போட்டியின் 6-வது போட்டி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடந்தது. தடகளம், டென்னிஸ், கால்பந்து, கைப்பந்து, துப்பாக்கி சுடுதல், கபடி, நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட 26 போட்டிகள் இதில் இடம்பெற்றன. இதில், தமிழ்நாட்டில் இருந்து 600 வீரர்கள் உள்பட, நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்து 400 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் இதுவரையில் இல்லாத அளவு தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர். 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களைப்பெற்று முதலிடம் பெற்ற மராட்டியத்துக்கு அடுத்தாற்போல, 2-வது இடத்தைப் பெற்று மிளிர்ந்தார்கள். இந்த போட்டியின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் இருந்தும் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டார். "நகரங்களில் இருந்து மட்டுமல்லாமல், கிராமங்களில் இருந்தும், அதிலும் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்தில், 'கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்' என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் அறிமுகப்படுத்தும் வகையில், விரைவில் திருச்சியில் தொடங்கி வைக்கப்போகிறேன்" என்று அவர் அறிவித்தது, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்டில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, எறிபந்து, ஜிம், டென்னிகாயிட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபடி, பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளுக்கான உபகரணங்களும் மற்றும் விசில், டேப், டி-சர்ட்டுகள், தலைக்கு தொப்பி போன்ற பொருட்களும் இருக்கும். இந்த விளையாட்டுகளில் திறமை இருந்தாலும், அதற்குரிய பயிற்சிகளைப்பெற விளையாட்டு உபகரணங்கள் வாங்க பொருளாதார ரீதியாக வசதியில்லாமல் சோர்ந்துபோய் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் ஒரு பெரிய உற்சாகத்தை அளிக்கும்.

ஊராட்சி மன்றங்கள் இந்த உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்த விளையாட்டு மைதானங்களை சீர்படுத்திக்கொடுக்கவேண்டும். அரசு கொடுக்கும் இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்திலுள்ள உபகரணங்களை உரிய முறையில் பயன்படுத்தினால் அனைத்து விளையாட்டுகளிலும் கிராமப்புற இளைஞர்கள் ஜொலிப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. நகர்ப்புறங்களில் உள்ள வாய்ப்புகளை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அவருக்கு துணையாக இருக்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டியும், மற்ற அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும் செய்திகள்