< Back
தலையங்கம்
அறிவு திருக்கோவிலாக கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
தலையங்கம்

அறிவு திருக்கோவிலாக கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

தினத்தந்தி
|
19 July 2023 1:27 AM IST

மறைந்த கலைஞர் கருணாநிதி, ஒரு பன்முகத் தன்மை கொண்ட வித்தகர். பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும், மனிதாபிமானத்திலும், நிர்வாக ஆற்றலிலும், அரசியல் சாதுர்யத்திலும் அவருக்கு நிகர் அவரே.

றைந்த கலைஞர் கருணாநிதி, ஒரு பன்முகத் தன்மை கொண்ட வித்தகர். பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும், மனிதாபிமானத்திலும், நிர்வாக ஆற்றலிலும், அரசியல் சாதுர்யத்திலும் அவருக்கு நிகர் அவரே. எழுத்திலும், வாசிப்பிலும் தீராக் காதல் கொண்டவர். அவரது நினைவை போற்றும் வகையில், சங்கம் வளர்த்த மதுரையில் அறிவுத் திருக்கோவிலாக, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார்.

ஏற்கனவே, மக்களுக்கு பல மருத்துவ திட்டங்களை செயலாக்கத்துக்கு கொண்டுவந்த கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை 4.89 ஏக்கரில் கட்டி, கடந்த மாதம் அதை டாக்டர்-நர்சுகளுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். எப்படி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் கருணாநிதி திறந்தாரோ, அதுபோல 'தமிழ் நகரம்' என்று புகழப்படும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, மின்னல் வேகத்தில் பணிகளை முடித்து, ஜூலை 15-ந்தேதி திறக்கப்பட்டது. திறப்பு விழாவின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், தமிழ்நாட்டின் கலைநகர் மதுரைதான்.

இந்த பிரமாண்டமான நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடி பரப்பில், ரூ.120 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் குளுமை வசதியுடனான இந்த நூலகம், 6 தளங்களைக் கொண்டது. 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. எல்லா துறை தொடர்பான நூல்களும் இங்கு இருக்கிறது. 1824-ல் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து இங்குதான் இருக்கிறது. இப்படி பழமையான நூல்கள் முதற்கொண்டு நவீன நூல்கள் வரை எல்லாம் இருக்கிறது. தரைத்தளத்தில், தமிழ்நாடு பாடநூல்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள் ஆகியவற்றை பார்வையற்றோர் எளிதாக பயிலும் வகையில், 'பிரெய்லி' எழுத்துகளோடு படிக்கக்கூடிய 1,800 நூல்கள் இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் 30 ஆயிரம் குழந்தைகளுக்கான நூல்களும், 2-ம் தளத்தில் ஒரு லட்சம் தமிழ் இலக்கியம் உள்பட அனைத்து பிரிவு நூல்களும், 3-ம் தளத்திலுள்ள ஆங்கில நூல்கள் பிரிவில், ஒரு லட்சம் அனைத்து வகை நூல்களும், 4-ம் தளத்தில் போட்டித் தேர்வுக்கான 30 ஆயிரம் நூல்களும், 50 ஆயிரம் ஆங்கில குறிப்பு உதவி நூல்களும் இடம் பெற்றுள்ளன. 6-ம் தளத்திலும் 60 ஆயிரம் ஆங்கில குறிப்பு உதவி நூல்களும், 16 ஆயிரம் அரிய நூல்களும் உள்ளன.

போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தென் மாவட்ட மாணவர்களுக்கு இந்த நூலகம் ஒரு கலங்கரை விளக்கமாகும். ஒரு குடும்பமாக சென்றால், பெண்களுக்கு சமையல் புத்தகங்கள், குழந்தைகளுக்கு காமிக்ஸ் நூல்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுக்கான நூல்கள்-பாட சம்பந்தமான நூல்கள், பெரியவர்களுக்கு ஆன்மிக, தத்துவ நூல்கள் என்று எல்லா வயதுக்கு ஏற்ற நூல்கள் இங்கு இருக்கின்றன. எப்படி, மதுரை என்றால் மணக்கும் மல்லியும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், திருமலை நாயக்கர் மகாலும் நினைவுக்கு வருமோ, அதுபோல இப்போது மதுரை என்ற உடனேயே இந்த அறிவுக் கோவிலாம் கலைஞர் நூற்றாண்டு நூலகம்தான் என்றென்றும் நினைவுக்கு வரும், முத்திரை பதிக்கும்.

மேலும் செய்திகள்