< Back
தலையங்கம்
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பா?
தலையங்கம்

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பா?

தினத்தந்தி
|
23 Sept 2024 7:21 AM IST

திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு லட்டு படைக்கும் நடைமுறை 1715-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கியது.

சென்னை,

இந்து மத வழிபாடு என்பது தனி சிறப்பு வாய்ந்தது. பூஜையில் இறைவனுக்கு மக்கள் உணவு பொருட்களை படைப்பது நைவேத்தியம். அதையே பக்தர்களுக்கு வழங்கும்போது பிரசாதமாகிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு வகையான பிரசாதம் உண்டு. வழிபாட்டை முடித்து வீடு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதம்தான் இறைவனின் அருளை பெற்றதற்கு அடையாளமாகும்.

அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதம் லட்டு ஆகும். திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு லட்டு படைக்கும் நடைமுறை 1715-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கியது.1803-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பூந்தி பிரசாதம் வழங்கப்பட்டது. ஜமீன்தார்களுக்கு மட்டும் லட்டாக வழங்கப்பட்டது. மீண்டும் 1943-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பியதன் அடையாளமே லட்டுதான். அந்த லட்டுக்கென தனி மணமும், சுவையும் உண்டு. ஆண்டுக்கு 12 கோடி முதல் 13 கோடி லட்டுகள் திருப்பதி கோவிலில் பிரசாதமாக விற்கப்படுகின்றன. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருடத்துக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கிறது. 4 அளவிலான லட்டுகள் தயாரிக்கப்பட்டாலும் பக்தர்களுக்கு 25 கிராம், 175 கிராம், 700 கிராம் எடையுள்ள லட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

எல்லா லட்டுகளுமே கோவில் வளாகத்திலுள்ள சமையல் கூடத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. லட்டு செய்வதற்கான நெய்க்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி செலவாகிறது. ஒரு மாதத்துக்கு 6 லட்சம் கிலோ நெய் வாங்கப்படுகிறது. இப்போது ஒரு திடுக்கிடும் தகவலை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், லட்டு செய்வதற்காக வாங்கப்பட்ட நெய்யில் மாடு, பன்றி கொழுப்பு, சோயா, சூரியகாந்தி எண்ணெய், பனை எண்ணெய் கலப்படம் செய்திருப்பது ஆய்வக சோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறியது, நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் லட்டுக்கான கலப்பட நெய்யை, தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நிறுவனம் சப்ளை செய்ததாக கூறப்பட்ட புகாரை அந்த நிறுவனமும் மறுத்துள்ளது. இதுகுறித்து, ஆந்திர அரசாங்கத்திடம் ஒரு அறிக்கை தரும்படி மத்திய அரசாங்கமும் கேட்டிருக்கிறது. "நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து ஒரு விரிவான விசாரணைவேண்டும். லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை கெடுக்கும் எந்த செயலும் இனி நடக்கக்கூடாது" என்பது பக்தர்களின் கோரிக்கை. இந்த நிலையில், திருப்பதி கோவிலை புனிதப்படுத்த பரிகார பூஜைகள் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் ஒரு கிலோ நெய்யை ரூ.700-க்கு விற்பனை செய்யும் நிலையில், திருப்பதி தேவஸ்தானம் ரூ.320 முதல் ரூ.418 வரை என்ற விலையிலேயே வாங்கியிருக்கிறது. குறைவான விலையில் தரமில்லாத நெய் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், இவ்வளவு பெரிய கோவிலில் உணவை, குறிப்பாக நெய்யின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகம் இல்லை. இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, பிரசாதங்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு வழங்கவேண்டும். விஸ்வ இந்து பரிஷத் கூறும் கருத்தான, "இந்து கோவில்களை அரசாங்கம் நிர்வகிப்பதற்கு பதிலாக ஆன்மிக பெரியோர்கள் நிர்வகிக்கலாம்" என்பதையும் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மேலும் செய்திகள்