சூரியனை ஆய்வு செய்ய புறப்படுகிறது ஆதித்யா எல்-1
|'3 சந்திரயான்' விண்கலன்களை விண்ணில் ஏவி சாதனை படைத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ', இப்போது சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலத்தை இன்று (சனிக்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
2008-ம் ஆண்டு முதலாவதாக 'சந்திரயான்-1' விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு, அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 'மங்கள்யான்' விண்கலம் தயாராகி வருகிறது. 'சந்திரயான்-2' முழு வெற்றியை அடையாவிட்டாலும், அதில் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி இன்னும் நிலவை சுற்றிவந்து பல தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. தற்போது அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3', இதுவரை உலகில் எந்தநாடும் இறங்காத, நிலவின் தென்துருவத்தில் இறங்கி, பல ஆய்வுகளை நடத்திக்கொண்டு இருக்கிறது.
இப்போது பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிதான் இன்று அரங்கேறுகிறது. சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் ஆகும். அங்கு யாராலும் போகமுடியாது. சூரியஒளி அங்கிருந்து கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவில், வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் வந்து 8 நிமிடங்களில் பூமியை அடைகிறது. பூமியில் இருந்து சூரியனை 17-ம் நூற்றாண்டில் விஞ்ஞானி கலிலியோ கலிலீ ஒரு டெலெஸ்கோப் மூலம் ஆய்வு செய்ததன் விளைவாக, கண் பார்வையை இழந்தார். இன்று பயணத்தை தொடங்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில், சோலார் அல்டிராவயலட் இமேஜிங் டெலெஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்டிரோ மீட்டர் உள்ளிட்ட பல உயரிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டெலெஸ்கோப் மூலம் சூரியனை படம் பிடிக்க முடியும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்படும் இந்த விண்கலம் 15 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்புவிசை சரிசமமாக இருக்கும் 'லாக்ராஞ்சியன் பாயிண்ட்-1' என்ற ஒளி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த இடத்துக்கு விண்கலன் போய் சேர 4 மாதங்கள் ஆகும். விண்கலன் நிலை நிறுத்தப்படும் இடத்தில் இருந்து, சூரியனை எந்த மறைவு கிரகணமும் இல்லாமல் நேரடியாக பார்க்க முடியும். இதனால் அங்கிருந்து தொலை உணர்வு தொழில் நுட்பங்கள் மூலமாக சூரியனின் புறவெளி, சூரியக்காற்று, சூரிய புயல், மின்காந்த அலை, எக்ஸ் கதிர் வீச்சு ஆகியவற்றை ஆய்வு செய்யும். ஏற்கனவே, அமெரிக்கா இதே இடத்தில் இருந்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. ஐரோப்பா கூட்டமைப்பு, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளும் சூரியனை ஆய்வு செய்து இருக்கின்றன.
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் இந்த முயற்சி புகழ் சேர்க்கும். ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் படித்த, தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த நிகர் சாஜி என்ற பெண் விஞ்ஞானி பணியாற்றுவதும், இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டெலஸ்கோப்பை வடிவமைத்த குழுவில், மதுரை பேராசிரியர் ரமேஷ் பணியாற்றியதும் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. இதுவரை அனுப்பப்பட்ட 3 சந்திரயான்களின் திட்ட இயக்குனர்களாக தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, வனிதா, வீரமுத்துவேல் பணியாற்றியதும், 'மங்கள்யான்' விண்கலத்தில் அருணன் சுப்பையா பணியாற்றுவதும் சிறப்புக்குரியது.