நடுங்க வைத்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு
|ஜனநாயகத்தின் கோவில் நாடாளுமன்றம். இங்குதான் நாட்டிலுள்ள அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூடி, மக்களுக்கு தேவையான சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.
ஜனநாயகத்தின் கோவில் நாடாளுமன்றம். இங்குதான் நாட்டிலுள்ள அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூடி, மக்களுக்கு தேவையான சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். பிரதமரும், அனைத்து மந்திரிகளும் இங்குவந்து மக்கள் கடமையை ஆற்றுகிறார்கள். அந்த நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இருவர் உள்ளே குதித்து, புகைக் குப்பிகளை வீசி நடத்திய தாக்குதல், நாடு முழுவதையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இவ்வளவுக்கும் அன்றைய தினம் ஒரு முக்கியமான நாள். 22 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி காலை 11.30 மணி அளவில் ஒரு வெள்ளை அம்பாசிடர் காரில் 5 பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த அந்த 5 பேரும், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்த பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் டெல்லி போலீசார் பதிலடி கொடுத்தனர். 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதலில் 8 பாதுகாப்பு படையினரும், ஒரு தோட்டக்காரரும் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், 13-ந்தேதியோ, அதற்கு முன்பாகவோ நாடாளுமன்றத்தை தாக்குவேன் என்று கூறியிருந்தார். இவ்வளவு அச்சுறுத்தல் இருந்தும், அதே 13-ந்தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில், மதியம் ஒரு மணிக்கு நேரமில்லா நேர நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து, இரு இளைஞர்கள் குதித்து, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை எடுத்து வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை குபு.. குபு.. என்று வெளியே வந்தது. ஒருவர், உறுப்பினர்கள் இருக்கைகளில் தாவித் தாவி குதித்து ஓடினார். இருவரும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம், ஜெய்பீம், ஜெய் பாரத் என்று உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாதுகாப்பு படையினரும் பிடித்துவிட்டார்கள். அவர்களைப்போல, வெளியேயும் இதேபோல, ஒரு 42 வயது பெண்ணும், 25 வயது ஆணும் புகைக் குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பினர். இவர்களெல்லாம் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் இன்ஸ்டிராகிராம், முகநூல் போன்ற சமூகவலைதளங்களில், பகத்சிங் பெயரிலான ரசிகர்கள் பக்கத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நட்பை வளர்த்துக்கொண்டவர்கள். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் விரக்தியடைந்ததாக கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், அதைமீறி உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். காலணிக்குள் வைத்திருந்த பிளாஸ்டிக் குப்பியை மெட்டல் டிடெக்டர் கண்டுபிடிக்காது என்றால், இது பெரிய குறைபாடாகும்.
மாதக்கணக்கில் நேரில் பார்க்காமல், சமூக வலைதளங்கள் மூலம் அவர்கள் திட்டமிட்டதை உளவுப் பிரிவால் கண்டுபிடிக்க முடியாதா? இந்த இளைஞர்களின் நோக்கம் என்ன? அவர்கள் எதை அடைய நினைக்கிறார்கள்? அவர்களுக்கு ஏதாவது பின்புலம் இருக்கிறதா? இந்த நாளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு போலீசார் விடை காணவேண்டும். இந்த சம்பவத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தவேண்டும்.