ஒரு ரெயில் நிலையம் - ஒரு தயாரிப்பு!
|இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில ஊர்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் மிகவும் புகழ்பெற்றது.
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில ஊர்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் மிகவும் புகழ்பெற்றது. மற்ற ஊர்களிலும் அதேபோல தயாரித்தாலும், குறிப்பிட்ட அந்த ஊரில் தயாரிக்கப்படும் பொருளுக்கு மிகவும் தனித்துவம் உண்டு. இது கைவினை பொருட்கள் மட்டுமல்ல, நெசவு பொருட்கள், உணவு பொருட்கள் என்று நீண்ட பட்டியலே இருக்கிறது. அத்தகைய பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அந்த ஊரில்தான் வாங்க வேண்டும் அல்லது அந்த ஊரில் தயாரித்தவற்றைத்தான் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். தலையாட்டி பொம்மை எங்கு தயாரிக்கப்பட்டாலும், காலாகாலமாக தஞ்சாவூரில் தயாரிக்கும் தலையாட்டி பொம்மைக்குத்தான் தனி பெயர் உண்டு. இதுபோல காஞ்சீபுரம், ஆரணி பட்டுபுடவைகளுக்குத்தான் பரம்பரை பரம்பரையாக கிராக்கி உண்டு. எத்தனையோ ஊரில் பாய் தயாரிக்கப்பட்டாலும், உலகப் பிரசித்திபெற்ற பத்தமடை பாய் என்றால்தான், எல்லோரும் வாங்க விரும்புவார்கள். வெள்ளி கொலுசு என்றால் சேலத்துக்கு தனி சிறப்பு உண்டு. திருப்பூர் பனியன், பவானி ஜமுக்காளம் போன்ற பல பொருட்களுக்கு மட்டுமல்லாமல், சாப்பிடும் பொருட்களுக்கும் பல ஊர்கள் பிரபலமாக இருக்கிறது.
நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், கடம்பூர் போளி, கோவில்பட்டி கடலைமிட்டாய், சாத்தூர் காரசேவு, சங்கரன்கோவில் பிரியாணி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்கி பிஸ்கட், ஊத்துக்குளி வெண்ணெய் என்ற நீண்ட பட்டியலே இருக்கிறது. இந்த பொருட்களை நம்பி நிறைய பேர் வாழ்கிறார்கள். இதன் தயாரிப்பிலும், விற்பனையிலும் ஏராளமானவர்களுக்கு வாழ்வாதாரம் இருக்கிறது. அதனால்தான், பிரதமர் நரேந்திரமோடி உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். தீபாவளி நேரத்தில் கூட, "எல்லோரும் உள்ளூர் பொருட்களையே வாங்குங்கள்" என்று வலியுறுத்தினார். இத்தகைய உள்ளூர் பொருட்களை நம்பி வாழ்பவர்களுக்கு உதவுவதற்காக, "ஒரு ரெயில் நிலையம் - ஒரு தயாரிப்பு" என்ற திட்டம் முன்னோட்டமாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்தந்த ஊரில் புகழ்பெற்ற பொருட்களை விற்க வகை செய்வதற்காக, 6 மாதங்களுக்கு ஸ்டால் அமைத்துக்கொள்ள ஒரு இடத்தை ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கிக்கொடுக்கும். இந்த ஸ்டால்களை அமைக்க பதிவுபெற்ற கைவினை தொழிலாளர்கள், நெசவாளர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் தகுதி பெற்ற நலிந்த பிரிவினர் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த ஸ்டால்களுக்காக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள 532 ரெயில் நிலையங்களில் 137 ரெயில் நிலையங்களில் இவ்வாறு உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய ஸ்டால்கள் வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்து இருப்பதாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகநேசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில், காஞ்சீபுரம் பட்டு சேலைகள், மதுரை ரெயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்டால்களில் நல்ல விற்பனை நடக்கிறது. ஸ்டால்களை தவிர தள்ளு வண்டியில் பிளாட்பாரத்திற்கு கொண்டுபோய் ரெயில் பெட்டிகளில் உள்ள பயணிகளுக்கும் விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. மொத்தத்தில் இது உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதற்கும், அந்த பொருட்களை நம்பி வாழ்பவர்களுக்கும் பலனளிக்கும் ஒரு இரட்டை நன்மை திட்டம்.