< Back
தலையங்கம்
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறது 5ஜி
தலையங்கம்

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறது 5ஜி

தினத்தந்தி
|
13 Aug 2022 1:19 AM IST

7 நாட்களாக 5-ம் தலைமுறை அலைக்கற்றை அதாவது 5ஜி ஏலத்தை மத்திய அரசாங்கம் நடத்தியது.

7 நாட்களாக 5-ம் தலைமுறை அலைக்கற்றை அதாவது 5ஜி ஏலத்தை மத்திய அரசாங்கம் நடத்தியது. ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு 10 அலைவரிசைகளில் 72,098 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை தொலைதொடர்பு நிறுவனங்கள் பயன்பாட்டுக்காக இந்த ஏலம் விடப்பட்டது. இதில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 26 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 19,867 மெகாஹெர்ட்ஸ் அளவு அலைக்கற்றையை ரூ.43,084 கோடிக்கும், வோடோபோன்-ஐடியா நிறுவனம் 2,666 மெகாஹெர்ட்ஸ் அளவு அலைக்கற்றையை ரூ.18,784 கோடிக்கும், 400 மெகாஹெர்ட்ஸ் அளவு அலைக்கற்றையை அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

அதானி நிறுவனம் எடுத்த அலைக்கற்றையை பொது சேவைக்கு பயன்படுத்தமுடியாது. ஒட்டுமொத்தமாக 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்டது. ஆனால் 71 சதவீத அலைக்கற்றைகள் மட்டும் ஏலத்தில் நிறுவனங்களால் எடுக்கப்பட்டது. நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி பயன்பாடு அடுத்த மாதத்தில் தொடங்கிவிடும். 5ஜியை பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு மிகவும் தாமதமாகத்தான் வந்து இருக்கிறது. உலகில் பாதிக்கு மேல் உள்ள பகுதிகளில் 100 கோடிக்கு மேல் மக்கள் 5ஜி சேவையை ஏற்கனவே பயன்படுத்திவருகிறார்கள். தென்கொரியாவில் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.

தகவல் தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டம் 2ஜி ஆகும். அப்போது நம் செல்போன் மூலமாக தகவல்களை பேசவும், கேட்கவும் முடிந்தது. எஸ்.எம்.எஸ். என்று கூறப்படும் குறுஞ்செய்திகளை அனுப்பவும், பெறவும் மட்டுமே முடிந்தது. அடுத்து 3ஜி வந்தது. இதன்மூலம் தெளிவான, விரைவான தகவல் தொடர்புகள் சாத்தியமாகின. இணையதளத்தை பயன்படுத்தும் வேகமும் அதிகமானது. தொடர்ந்து வந்தது 4ஜி தொழில்நுட்பம். தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் இந்த 4ஜி சேவையை பயன்படுத்துகிறார்கள். தனியார் செல்போன் நிறுவனங்கள்தான் இந்த 4ஜி சேவையை வழங்குகிறதே தவிர, மத்திய அரசாங்கத்தின் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த சேவையை இன்னும் வழங்கவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனமும் உடனடியாக 4ஜி சேவையையும், தொடர்ந்து 5ஜி சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும்.

4ஜி மூலம் தகவல்தொடர்பு மேம்பட்டது. வீடியோ அழைப்புகள் மேற்கொள்வது, இணையதளங்களில் தகவல்களை தேடுவது மற்றும் தகவல்களை அனுப்புவது, பெறுவது போன்ற பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்போதெல்லாம் வாட்ஸ்அப் வீடியோ கால்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ள தங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் குக்கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் கூட தினமும் பேசி மகிழ்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்கள் வீடியோ கால்கள் மூலமே நேர்முக பேட்டியை முடித்து தேர்வு செய்துவிடுகிறார்கள். இப்போது வந்துள்ளது அதிநவீன தகவல்தொடர்பு வசதியான 5ஜி. இது ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பமாகும். இதன்மூலம் தகவல்தொடர்பு மட்டுமல்லாமல் இணையதள பயன்பாட்டு வேகமும் மின்னல் வேகத்தில் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் தற்போது மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் இணைய வேகத்தைவிட ஆயிரம் மடங்கு வேகத்தில் 5ஜி தொழில்நுட்பம் செயல்படும்.

இதுதவிர தரவுகளை அனுப்புவது, பெறுவது போன்றவையும் நூறு மடங்கு வேகத்தில் செயல்படும். இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தகவல் தொடர்பில் மட்டுமல்லாமல் மக்கள் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான துறைகளில் முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். தானியங்கி வாகனங்கள் இயக்கம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்று கூறப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம், 'ரோபாடிக்ஸ்' எனப்படும் எந்திரவியல் தொழில்நுட்பம், 'ஸ்மார்ட்ஹோம் டெக்னாலஜி' என்ற எங்கிருந்தாலும் வீட்டில் உள்ள மின்னணு மற்றும் சாதனங்களை இயக்கும் வசதி போன்றவை 5ஜி தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகும். மொத்தத்தில் எதிர்கால இந்தியாவின் முன்னேற்றம் 5ஜி போன்ற தொழில்நுட்பங்களையே சார்ந்துள்ளது. அதற்கான வாசல் இப்போது திறக்கப்பட்டுவிட்டது.

மேலும் செய்திகள்