25 லட்சம் வீடுகளில் சூரிய வெப்ப மின்சாரம்
|மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள “பிரதமரின் சூரியோதய திட்டம்” தமிழ்நாட்டுக்கு கை கொடுக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மின்சார தேவை ஆண்டுக்கு ஆண்டு மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே போகிறது. இங்கு வசூலிக்கப்படும் மின்சார கட்டணம் மிக குறைவாக இருப்பதால், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு கடனில் தத்தளிக்கிறது. அதை சரிகட்ட, இந்த நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக ரூ.17,117 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனல் மின்சார நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வாங்கவேண்டிய நிலை இருக்கிறது. இத்தகைய நிலையை தவிர்க்க தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைவரான கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் லக்கானியும் சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்ற முழுமூச்சாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதானி நிறுவனத்தின் சார்பில் கமுதியில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் 648 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய வெப்ப மின்சார நிலையம் இயங்குகிறது. உலகிலேயே ஒரே இடத்தில் அதிக அளவு சூரிய வெப்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையம் இதுதான்.
தமிழ்நாட்டில் சூரிய வெப்ப மின்சார உற்பத்திக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. காரணம் ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில், மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள "பிரதமரின் சூரியோதய திட்டம்" தமிழ்நாட்டுக்கு கை கொடுக்கும் திட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு, மாதம் 300 யூனிட்டுகள் மின்சாரம் இலவசமாக கிடைக்க வகை செய்யப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை மிச்சமாகும். அதற்கு மேல் கிடைக்கும் மின்சாரத்தை மின் பகிர்மான கழகத்துக்கு கொடுப்பதன்மூலம் வருவாயும் கிடைக்கும்.
வீடுகளுக்கான மின்தகடுகளை 3 கிலோவாட் வரையிலான மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் பொருத்த ரூ.1.5 லட்சம் செலவாகும். இதில் 3 கிலோவாட் வரை ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரமும், 3 முதல் 10 கிலோவாட் வரை நிறுவினால், அடுத்த ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் தலா ரூ.9 ஆயிரமும் மானியமாக கிடைக்கும். மீதி தொகைக்கும் வங்கிகளில் கடன் வாங்கிக்கொள்ளலாம். இந்த ஒரு கோடி வீடுகளில் தமிழ்நாட்டில் இருந்து 25 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்த தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் மின் பகிர்மான கழகத்தில் 2,837 பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களும் அந்த பகுதிக்குட்பட்ட ஆயிரம் வீடுகளில் சூரிய தகடுகள் பொருத்தும் திட்டத்துக்காக பதிவு செய்ய ஊக்குவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஊழியர்கள் மின் நுகர்வோர்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதன் மூலம் இலவச மின்சாரம் மட்டுமல்ல, கோடைகாலத்தில் கிடைக்கும் கூடுதல் மின்சாரம் மூலம் வருவாய் ஈட்டவும் வழிகாட்டவேண்டும்.