20 ஆண்டு கால ஓய்வூதிய கோரிக்கை நிறைவேறியது!
|இந்த திட்டத்தை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு முதல் ஆண்டில் ரூ.6,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை,
மத்திய, மாநில அரசுகள் தங்களது ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு கணிசமான தொகையை ஒதுக்கவேண்டியதுள்ளது. ஓய்வூதியத்தை எடுத்துக்கொண்டால், 2003-க்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தபோது, ஓய்வூதியத்துக்காக ஊழியர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. அரசு பங்களிப்பு மட்டும் இருந்தது. அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இதுதவிர 80, 90, 100 வயதானவுடன் அவர்கள் ஓய்வூதியத்தொகை உயர்த்தப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதிச்சுமை மிக அதிகமாக இருந்தது என்று கூறி, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்துக்காக தங்கள் சம்பளத்தில் இருந்து பங்களிப்பாக 10 சதவீதம் கட்டவேண்டும். அரசு 14 சதவீதம் தரும்.
இந்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஓய்வுபெற்றவுடன் 40 சதவீத தொகையை கொடுத்துவிட்டு, மீதம் உள்ள 60 சதவீதத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த பாதி தொகையும் கிடைக்கவில்லை. எவ்வளவு கிடைக்கும் என்றும் உறுதியாக சொல்லமுடியாத நிலை இருந்தது. ஊழியர்கள் அனைவரும் எங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம், பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். இப்போது 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரும் சூழ்நிலையில், மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், கடந்த 24-ந்தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக ஊழியர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற அடிப்படை சம்பளத்தில் பாதி தொகையை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த ஓய்வூதியத்துக்காக ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து 10 சதவீத தொகையை பங்களிப்பாக வழங்கவேண்டும். மத்திய அரசு 18.5 சதவீதம் வழங்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்துவிட்டால், அவரது மனைவி அல்லது கணவருக்கு ஓய்வூதியத்தொகையில் 60 சதவீதம் வழங்கப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு முதல் ஆண்டில் ரூ.6,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் மொத்தம் 90 லட்சம் மத்திய-மாநில அரசு பணியாளர்கள் பயனடைவார்கள். உறுதியான ஓய்வூதியமும் கிடைக்கும். 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் முழு ஓய்வூதியத்தையும் பெறத்தகுதி படைத்தவர்கள். 10 ஆண்டுகள் மட்டும் பணிபுரிந்திருந்தால் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் இந்த திட்டம் நிச்சயமாக மாநில அரசுகளாலும் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் அரசு ஊழியர்கள் அல்லாத, வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தை வாங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு ஏதாவது ஒரு வகையில் கருணைக்கரம் நீட்டவேண்டும். வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்றவகையிலான உதவி வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.