நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்கள் சஸ்பெண்டா ?
|ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படுவது நாடாளுமன்றம். ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றாக இருப்பது நாடாளுமன்றம்.
ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படுவது நாடாளுமன்றம். ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றாக இருப்பது நாடாளுமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஆட்சி அமைக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான சட்டங்கள், திட்டங்களெல்லாம் இந்த உறுப்பினர்களாலேயே வகுக்கப்படுகிறது. நாடாளுமன்ற விவாதங்களெல்லாம், நாட்டுக்கு மிகவும் பயனளிப்பதாகும். எந்த ஒரு மசோதா என்றாலும், உறுப்பினர்களின் விவாதத்தில் வழங்கப்படும் ஆலோசனைகள், பரிந்துரைகளைக் கொண்டு நிறைவேற்றப்பட்டால்தான் முழுமையாக பரிணமிக்கும்.
அத்தகைய நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, இப்போது கூட்டத்தொடர் அங்குதான் நடக்கிறது. கடந்த 13-ந்தேதியன்று ஒரு முக்கியமான நாளாக கருதப்பட்டது. ஏனெனில், 22 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 9 பாதுகாப்பு படையினரும் வீரமரணம் அடைந்தனர். இதுமட்டுமல்லாமல், இந்த நாளில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவிலுள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் இயக்க தலைவரும் மிரட்டியிருந்தார்.
அத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அன்று நாடாளுமன்ற வளாகத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் இன்னுயிரை நீத்த பாதுகாப்பு படையினருக்கு, பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அந்த நிகழ்வு முடிந்த சற்று நேரத்தில், மக்களவை கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்கள் எம்.பி.க்கள் இருக்கை மீது தாவி குதித்து ஓடினர். தங்கள் கைகளில் இருந்த வண்ண குப்பிகளை வீசி நாடாளுமன்றம் முழுவதும் மஞ்சள் புகையை கக்கச் செய்தனர். இதுதவிர, "சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்" என்று கோஷங்களும் எழுப்பினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண்ணும், இளைஞரும் இதேபோல செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கமளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தினமும் அவையில் போராடினர். கடும் அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து சில நாட்களாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சேர்த்து 146 உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே ஒரே கூட்டத்தொடரில் இத்தனை உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதில்லை. சஸ்பெண்டு செய்யப்பட்டவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இதற்கு முன்பு 1989-ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திராகாந்தி படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட தாக்கர் கமிஷன் அறிக்கை மீது விவாதம்வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்ட நேரத்தில், 63 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் அவையில் இல்லாமல், 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 3 பழைய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு பதிலாக, 3 புதிய மசோதாக்களுமே அவர்கள் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அவர்கள் கோரிக்கை நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை மந்திரி விளக்கமளிக்கவேண்டும் என்பதுதான். இது நியாயமான கோரிக்கை என்ற வகையில், மத்திய அரசாங்கம் நிறைவேற்றியிருக்கலாம். அதை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசாங்கம் சகிப்பு தன்மையோடு சந்தித்து இருக்கலாம் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இருந்து ஆரோக்கியமான விவாதங்களில் கலந்துகொண்டும், அரசாங்கம் பதிலளித்தும் இருந்தால்தான் ஜனநாயகக் கடமை பூரணமடையும்.