எல்லா பருவ காலங்களிலும் வளரும் 109 பயிர் வகைகள்!
|இன்றைக்கு இயற்கை வேளாண்மைக்கு மத்திய-மாநில அரசுகள் அளித்துவரும் ஊக்கத்தால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியை கடந்து உலகில் முதலிடத்தை பிடித்தாலும், வேளாண் பொருட்கள் உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு அடைய முடியவில்லை. ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தாலும், நாளடைவில் அதிக மகசூல் கிடைக்காததால் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை நாடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மகசூல் அதிகரித்தபோதும், பயிர்களில் உயிர்ச்சத்து குறைந்து, சாப்பிடும் மனிதர்களுக்கு நோய் நொடி உருவாக காரணமாக அமைந்தது. எனவே, மீண்டும் இயற்கை வேளாண்மையை நோக்கி செல்ல வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இன்றைக்கு இயற்கை வேளாண்மைக்கு மத்திய-மாநில அரசுகள் அளித்துவரும் ஊக்கத்தால், மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை பொருட்களின் விலை சற்று அதிகம் என்றாலும் விரும்பி வாங்குகிறார்கள். பொதுவாக பயிர்கள் அதற்குரிய பருவகாலத்தில் மட்டுமே வளரும். பருவம் தப்பினால் விளைச்சல் இருக்காது. ஆனால், இப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் அனைத்து பருவநிலைகளையும் தாங்கி வளரும் வகையிலான 109 புதிய பயிர் வகைகளை கண்டுபிடித்துள்ளது. இதில் 34 வயல் பயிர்கள், 27 தோட்டப் பயிர்களும் அடங்கும். இந்த பயிர் வகைகளை பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதாவது, வயல் பயிர்களான சிறு தானியங்கள், தீவன பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார்சத்து பயிர்கள் உள்பட பல்வேறு தானியங்களின் விதைகளையும், தோட்டப்பயிர்களான பழங்கள், காய்கறி, கிழங்கு வகைகள், மசாலா பொருட்கள், பூக்கள் மற்றும் மூலிகை பொருட்களையும் அவர் அறிமுகம் செய்தார்.
குறிப்பாக, கல்ப சுவர்ணா, கல்ப சதாப்தி என்ற 2 புதியவகை தென்னை மரங்களையும் அவர் அறிமுகம் செய்தார். இதில், கல்ப சுவர்ணா உயரம் மிகவும் குறைந்த மரம். ஆண்டுக்கு 130 இளநீர் தேங்காய்களை விளைவிக்கும். இதுபோல், கல்ப சதாப்தி மிகவும் உயரமானது. ஆண்டுக்கு 148 பெரிய தேங்காய்களை விளைவிக்கும்.
இந்த இருவகை தென்னை மரங்களையும் தமிழ்நாட்டில் விளைவிக்க இந்திய வேளாண் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், உப்புத்தன்மை மிகுந்த கடலோர பகுதிகளிலும் விளையும் வகையிலான புதிய ரக சி.ஆர்.தான் 416 என்ற நெல் விதையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 125 நாள் நெற்பயிரான இதை விளைவித்தால் ஒரு ஹெக்டேருக்கு 49.87 குவிண்டால் மகசூல் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் கோதுமை சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்பநிலை இல்லாததால், இங்கு விளைவிக்க முடியாது. ஆனால், இப்போது கடும் வெப்பத்தையும் தாங்கி வளரும் கோதுமை பயிர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோதுமையை பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 30.2 குவிண்டால் மகசூல் கிடைக்கும். இந்த 109 பயிர்களுக்கான விதைகளும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் விவசாயிகளுக்கு கிடைக்கும். "அதிக மகசூல் தரும், அனைத்து பருவகால சூழலையும் தாங்கி வளரும் இந்த பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு வருவாய் பெருகும்" என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் வேளாண்மைத் துறையும், தோட்டக்கலைத்துறையும் உடனடியாக இந்த விதைகள் தமிழக விவசாயிகளுக்கு வழங்கவும், அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தகுந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும். விவசாயத்தில் இந்த 109 ரக பயிர்களும் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.