விம்பிள்டன் டென்னிஸ்: ரூப்லெவ், பெகுலா கால்இறுதிக்கு முன்னேற்றம்
|விம்பிள்டன் டென்னிசில் ரூப்லெவ், ஜெசிகா பெகுலா கால்இறுதிக்கு முன்னேறினர். 16 வயதான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவின் வீறுநடையும் தொடருகிறது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்றில் 7-ம் நிலை வீரர் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார். இருவரும் நீயா-நானா என்று கடுமையாக மோதிக் கொண்டதால் ஆட்டம் 5 செட் வரை நகர்ந்தது. 3 மணி 17 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் ரூப்லெவ் 7-5, 6-3, 6-7 (6-8), 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் பப்ளிக்கை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
ரூப்லெவ் விம்பிள்டன் கால்இறுதிக்குள் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். அலெக்சாண்டர் பப்ளிக் 39 ஏஸ் சர்வீஸ்கள் வீசி மிரட்டிய போதிலும் பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு அதிகமான தவறுகளை செய்தது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஜானிக் சினெர் (இத்தாலி) 7-6 (7-4), 6-4, 6-3 என்ற நேர் செட்டில் டேனியல் எலாகி காலனை (கொலம்பியா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னதாக நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) வெளியேற்றினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி 7-6 (7-5), 3-6, 4-6 என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் இவான் டோடிக் (குரோஷியா), லதிஷா சான் (சீனதைபே) இணையிடம் வீழ்ந்தது.
இதே போல் ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சகெத் மைனெனி- யுகி பாம்ப்ரி கூட்டணி 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் போராடி டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்), அட்ரியன் மனரினோ (பிரான்ஸ்) இணையிடம் தோல்வியை தழுவியது.
சிறுவர் பிரிவில் ஆறுதல் அளித்த 15 வயதான இந்தியாவின் மனாஸ் தாம்னே 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ஹைடன் ஜோன்சை தோற்கடித்து 2-வது சுற்றை அடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் உக்ரைனின் சுரென்கோவை துவம்சம் செய்தார். பெகுலா கால்இறுதியில் செக்குடியரசின் வோன்ட்ரோசோவாவுடன் மோதுகிறார்.
தகுதி நிலை வீராங்கனையாக விம்பிள்டனில் அறிமுகமான 16 வயதான மிரா ஆன்ட்ரீவாவின் (ரஷியா) அதிரடி ஜாலம் கவனத்தை ஈர்த்துள்ளது. 3-வது சுற்றில் அவர் 6-2, 7-5 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் போட்டோபோவாவுக்கு அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றை எட்டினார். அவரது டென்னிஸ் வாழ்க்கையில் பெற்ற பெரிய வெற்றி இதுவாகும். அடுத்து மிரா ஆன்ட்ரீவா அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை சந்திக்கிறார்.