< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: கசட்கினா, மெட்விடேவ் அபார வெற்றி
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: கசட்கினா, மெட்விடேவ் அபார வெற்றி

தினத்தந்தி
|
6 July 2023 9:54 AM IST

விம்பிள்டன் டென்னிசில் ரஷியாவின் கசட்கினா, மெட்விடேவ் தங்களது ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றனர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் ஆட்டங்கள் மழையால் தாமதமாக தொடங்கின.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 7-5, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஆர்தர் பெரியை (இங்கிலாந்து) தோற்கடித்தார். அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ 7-6 (7-4), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வு யிப்பிங்கை (சீனா) விரட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் 23-ம் நிலை வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), ரஷியாவின் ரோமன் சபியுலினுக்கு எதிரான ஆட்டத்தில் 4 மணி நேரம் போராடி பணிந்தார். பாடிஸ்டா அகுத் 6-2, 6-7 (7-9), 7-6 (7-4), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-0 என்ற நேர் செட்டில் சாரா சோரிப்ஸ் டோர்மோவை (ஸ்பெயின்) பந்தாடினார். இந்த ஆண்டில் ஸ்வியாடெக் பெற்ற 40-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் டாரியா கசட்கினா 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் உள்நாட்டு வீராங்கனை ஜோடி புரேைஜ வெறும் 59 நிமிடங்களில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார்.

உக்ரைன் வீராங்கனை

முந்தைய நாள் மழையால் தடைப்பட்ட மார்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்) - மரியா சக்காரி (கிரீஸ்) இடையிலான ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது.முதல் செட்டில் ஒரு கேம் கூட வெல்லாத கோஸ்ட்யுக் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு 8-ம் நிலை வீராங்கனை சக்காரிக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதில் கோஸ்ட்யுக் 0-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆஸ்டாபென்கோ (லாத்வியா), போட்டாபோவா (ரஷியா), ஹேடட் மையா (பிரேசில்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) உள்ளிட்டோரும் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


மேலும் செய்திகள்