விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வியாடெக் கால்இறுதிக்கு தகுதி
|விம்பிள்டன் டென்னிசில் ஜோகோவிச், ஸ்வியாடெக் கால்இறுதிக்கு முன்னேறினர். இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியும் வெற்றி பெற்றது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முந்தைய நாள் பாதியில் நிறுத்தப்பட்ட நடப்பு சாம்பியனும், 2-வது நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) இடையிலான ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது. அனல் பறந்த இந்த மோதலில் ஜோகோவிச் 7-6 (8-6), 7-6 (8-6), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஹர்காக்சை சாய்த்தார். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 3 மணி 7 நிமிடம் தேவைப்பட்டது. 7 முறை சாம்பியனான ஜோகோவிச் கால்இறுதியில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார்.
மற்றொரு ஆடடத்தில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-7 (4-7), 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 43-ம் நிலை வீரர் கிறிஸ்டோபர் யுபங்க்சிடம் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். இதன் மூலம் யுபங்க்ஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய ஜிரி லெஹக்கா (செக்குடியரசு) காயத்தால் விலகியதால் மெட்விடேவ் முதல்முறையாக விம்பிள்டனில் கால்இறுதியை எட்டினார்.
ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஜாக்கப் பியர்னி- ஜோகனஸ் மன்டேவை வீழ்த்தி 3-வது சுற்றை அடைந்தது.
பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 16 வயதான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா), அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் பலப்பரீட்சையில் இறங்கினார். துடிப்பான ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மிரா ஆன்ட்ரீவா முதல் செட்டை கைப்பற்றி 2-வது செட்டில் 4-1 என்று வலுவான முன்னிலையில் இருந்தார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேடிசன் கீஸ் 2-வது செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்தியதுடன் கடைசி செட்டில் தனது பிடியை இறுக்கினார். முடிவில் மேடிசன் கீஸ் 3-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரீவாவை வெளியேற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 9-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
நடப்பு சாம்பியன் எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) எதிரான ஆட்டத்தில் பிரேசிலின் ஹேடட் மையா 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது முதுகுவலியால் பாதியிலேயே நடையை கட்டினார். இதனால் ரைபகினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-0 என்ற நேர் செட்டில் அலெக்சாண்ட்ரோவாவை (ரஷியா) பந்தாடினார்.
முன்னதாக 'நம்பர் ஒன்' வீராங்கனையும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் தோல்வியின் விளிம்பில் இருந்து தள்ளாடி மீண்டார். அவர் ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச்சுடன் (சுவிட்சர்லாந்து) மோதினார். இதில் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் இரண்டு முறை மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தப்பித்த ஸ்வியாடெக் அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி கண்டு 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் பென்சிச்சை சாய்த்து விம்பிள்டனில் முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 3 நிமிடங்கள் நீடித்தது.
மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2-6, 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) தோற்கடித்தார். திரில்லிங்கான இந்த மோதல் 2 மணி 46 நிமிடங்கள் நடந்தது.
உக்ரைன் மீது ரஷியாவின் போரும், அதற்கு பெலாரஸ் ஆதரவாக இருப்பதும் அதனால் உருவான பகைமை உணர்வு இவ்விரு வீராங்கனைகள் இடையே களத்தில் எதிரொலித்தது. ஆட்டம் முடிந்ததும் ஸ்விடோலினாவுடன் கைகுலுக்குவதை தவிர்த்த அஸரென்கா, நடுவருடன் மட்டும் கைகுலுக்கி விட்டு கிளம்பினார். அப்போது சில ரசிகர்கள் அஸரென்காவுக்கு எதிராகவும், ஸ்விடோலினாவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். அஸரென்காவுக்கு எதிராக 6-வது முறையாக மோதிய ஸ்விடோலினா அதில் பெற்ற முதல் வெற்றி இது தான்.