விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: நாளை தொடக்கம்...!!
|விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 3 முதல் 16-ந்தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது.
லண்டன்,
டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட்ஸ்லமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்தார்.
பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.
இந்நிலையில் 3-வது கிராண்ட்ஸ்லாமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டன் தொடரில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். ஜோகோவிச் 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார். ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்யும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறார். நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. அல்காரஸ் மற்றும் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
நடால் காயம் காரணமாக இந்தத் தொடரிலும் ஆடவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.