அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்
|21 வயதான இகா ஸ்வியாடெக், அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறி உள்ளார்.
நியூயார்க்,
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆன்ஸ் ஜபேர் (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினார்கள்.
இதில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17-ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப்போட்டி தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 6 நிமிட நேரம் தேவைப்பட்டது. 28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் அவர் இறுதிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். தற்போது 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தோல்வியால் கார்சியாவின் முதல் இறுதிப்போட்டி கனவு கலைந்தது.
மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகாஸ்வியாடெக் (போலந்து),-ஷபலென்கா (பெலாரஸ்) மோதினார்கள். 6-வது வரிசையில் உள்ள ஷபலென்கா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஸ்வியாடெக் சுதாரித்து ஆடி தொடர்ச்சியாக 2 செட்டையும் வென்று 3-6, 6-1, 6-4. என்ற செட் கணக்கில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறி உள்ளார்.
2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். ஷபலென்காவின் இறுதிப்பேரட்டி கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது. இறுதி போட்டியில் ஸ்வியாடெக்-ஆன்ஸ் ஜபேர் மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே)-கரென் கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-பிரான் செஸ்டியாபோ (அமெரிக்கா) மோதுகிறார்கள்.