அமெரிக்க ஓபன் டென்னிஸ்; வரலாறு படைத்த எவன்ஸ் - கச்சனோவ் ஆட்டம்
|அமெரிக்க ஓபன் டென்னிஸில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாக எவன்ஸ் - கச்சனோவ் ஆட்டம் வரலாறு படைத்துள்ளது.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் டான் எவன்ஸ் - ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-7 (6-8), 7-6 (7-2), 7-6 (7-4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கரேன் கச்சனோவை வீழ்த்தி டான் எவன்ஸ் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது.
இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாக எவன்ஸ் - கச்சனோவ் ஆட்டம் வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டம் ஒன்று 5 மணி நேரம் 25 நிமிடம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் ஸ்வீடனின் ஸ்டீபன் எட்பெர்க், அமெரிக்க வீரரான மைக்கேல் சாங்கை தோற்கடித்தார். தற்போது இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.