< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோகோ காப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

நோவக் ஜோகோவிச் (image courtesy: ATP Tour twitter via ANI)

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோகோ காப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
7 Sept 2023 2:20 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், கோகோ காப் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளில் கால்இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில், 23 'கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சை சந்தித்தார். கடும் வெப்பத்தால் ஸ்டேடியத்தின் மேற்கூரையில் பாதி மூடப்பட்ட நிலையில் அரங்கேறிய இந்த போட்டியில் எதிர்பார்த்தபடி 36 வயதான ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டெய்லர் பிரிட்சை விரட்டியடித்து 13-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபனில் உள்ளூர் வீரருக்கு எதிராக அவர் தொடர்ச்சியாக ருசித்த 12-வது வெற்றி இதுவாகும். 8-வது முறையாக ஜோகோவிச்சுடன் மல்லுக்கட்டிய பிரிட்ஸ் அவருக்கு எதிராக வெற்றியை பெற்றதில்லை என்ற மோசமான நிலை நீடிக்கிறது.

ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 47-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்று ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். இந்த வகையில் இதற்கு முன்பு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 46 முறை அரைஇறுதியை எட்டியதே சாதனையாக இருந்தது.

மற்றொரு கால்இறுதியில் உலக தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் 20 வயது அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், சக நாட்டை சேர்ந்த 10-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாபோவுடன் மோதினார். 3 மணி 7 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பென் ஷெல்டன் 6-2, 3-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் டியாபோவை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் பென் ஷெல்டன், ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் 19 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் 2017-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 21-ம் நிலை வீராங்கனையுமான ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) 68 நிமிடங்களில் துவம்சம் செய்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடித்து வைத்தார். இதன் மூலம் அவர் 2001-ம் ஆண்டுக்கு (செரீனா வில்லியம்ஸ்) பிறகு அமெரிக்க ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இளம் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார்.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா 6-0, 6-3 என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை சோரனா கிறிஸ்டியை ஊதித்தள்ளி முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் கரோலினா முச்சோவா-கோகோ காப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் நாதனில் லாமோன்ஸ்-ஜாக்சன் வித்ரோ இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த ஆண்டில் ரோகன் போபண்ணா-மேத்யூ கூட்டணி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதியை எட்டுவது இது 2-வது முறையாகும். அரைஇறுதியில் போபண்ணா இணை, பிரான்சின் பிர்ரி ஷூக்ஸ் ஹெர்பெர்ட்-நிகோலஸ் மகுட் ஜோடியை சந்திக்கிறது.

மேலும் செய்திகள்