அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கிரியாசிடம் வீழ்ந்தார் மெட்விடேவ்
|அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரியாசிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய ரஷிய வீரர் மெட்விடேவ் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தையும் இழக்கிறார்.
மெட்விடேவ் தோல்வி
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான டேனில் மெட்விடேவ் (ரஷியா), 25-ம் நிலை வீரர் நிக் கிரியாசுடன் (ஆஸ்திரேலியா) மோதினார். தனது அதிரடியான ஷாட்டுகளால் மெட்விடேவை திணறடித்த கிரியாஸ் மணிக்கு அதிகபட்சமாக 135 மைல்வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டினார்.
2 மணி 53 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் கிரியாஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். 2013-ம் ஆண்டு முதல் அமெரிக்க ஓபனில் விளையாடி வரும் கிரியாஸ் கால்இறுதி சுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். அவர் அடுத்து மற்றொரு ரஷிய வீரர் கரென் கச்சனோவை சந்திக்கிறார்.
அதே சமயம் இந்த தோல்வியின் மூலம் அடுத்த வாரம் வெளியிடப்படும் புதிய தரவரிசை பட்டியலில் மெட்விடேவ், 'நம்பர் ஒன்' இடத்தை இழக்கிறார். அமெரிக்க ஓபனின் இறுதி முடிவை பொறுத்து ரபெல் நடால் (ஸ்பெயின்), கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரில் ஒருவர் முதலிடத்தை பிடிப்பார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-1, 6-2, 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் கோரன்டின் மவுடேட்டை(பிரான்ஸ்) தோற்கடித்து கால்இறுதியை எட்டினார். இத்தாலி வீரர் பெரேட்டினி தன்னை எதிர்த்த ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் போகினாவை சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 7-6 (7-2), 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி சாய்த்தார். பெரேட்டினி கால்இறுதியில் கேஸ்பர் ரூட்டுடன் மோதுகிறார்.
ஜாபியர்- கோகோ காப் அசத்தல்
பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 7-6 (7-1), 6-4 என்ற நேர் செட்டில் குடெர்மெட்டோவாவை (ரஷியா) வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறினார்.
உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மட்டையை சுழட்டிய 12-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் 7-5, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் சூவாய் ஜாங்கை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். 18 வயதான கோகோ காப் 2009-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் கால்இறுதிக்கு வந்த அமெரிக்க இளம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
இதே போல் பிரான்சின் கரோலின் கார்சியா 6-4, 6-1 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவையும், ஆஸ்திரேலியாவின் டோம்ஜனோவிச் 7-6 (10-8), 6-1 என்ற நேர் செட்டில் லுட்மிலா சம்சோனோவையும் (ரஷியா) விரட்டினர். இதில் கரோலின் கார்சியா கால்இறுதியில் கோகோ காப்புடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.