தரநிலையில் இடம் பெறாமல் விம்பிள்டனில் ஒற்றையர் சாம்பியன்: வோன்ட்ரோசோவா புதிய சாதனை.!
|விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோசோவா முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டம் வென்று சாதனை படைத்தார்.
லண்டன்,
வோன்ட்ரோசோவா வெற்றி
லண்டனில் நடந்து வரும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள மார்கெட்டா வோன்ட்ரோசோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 2 செட்களிலுமே முதலில் பின்தங்கி இருந்த வோன்ட்ரோசோவா கடைசி கட்டத்தில் நெருக்கடியை நேர்த்தியாக சமாளித்து அபாரமாக மட்டையை சுழற்றி வெற்றியை தன்வசப்படுத்தினார். 1 மணி 20 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் வோன்ட்ரோசோவா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆன்ஸ் ஜாபியருக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடினார்.
தரநிலையின்றி சாதனை
24 வயது இடக்கை வீராங்கனையான வோன்ட்ரோசோவா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு அவர் 2019-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்டு இருந்தார்.
வழக்கமாக போட்டியில் பங்கேற்கும் 34 பேருக்கு தரநிலை வழங்கப்படும். ேவான்ட்ரோசோவா உலக தரவரிசையில் 42-வது இடத்தில் இருப்பதால் இந்த போட்டியில் தரவரிசையின்றி கலந்து கொண்டார். இருப்பினும் அவர் அபாரமாக செயல்பட்டு முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை முத்தமிட்டார். இதன் மூலம் அவர் 'ஓபன் எரா' வரலாற்றில் (1968-ல் இருந்து) போட்டி தரநிலையில் இடம் பெறாமல் விம்பிள்டனில் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
ரூ.24½ கோடி பரிசு
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 28 வயது ஆன்ஸ் ஜாபியருக்கு மீண்டும் ஒருமுறை கோப்பை கனவு கைகூடாமல் போனது. இதனால் அவர் ஆட்டம் முடிந்ததும் தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார். ஏற்கனவே ஆன்ஸ் ஜாபியர் 2022-ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளின் இறுதி சுற்றில் தோல்வி கண்டு ஏமாற்றம் அடைந்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
சாம்பியன் கோப்பையை கையில் ஏந்திய வோன்ட்ரோசோவா ரூ.24½ கோடியை பரிசாக அள்ளினார். தோல்வி அடைந்து 2-வது இடம் பெற்ற ஆன்ஸ் ஜாபியருக்கு ரூ.12¼ கோடி பரிசுத் தொகையாக கிட்டியது.