< Back
டென்னிஸ்
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
டென்னிஸ்

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
12 Sept 2022 5:34 AM IST

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. சென்னையில் சர்வதேச பெண்கள் டென்னிஸ் நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.25 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.9 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிக்கும் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே, 72-ம் நிலை வீராங்கனை வர்வரா கிராசெவா (ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான யூஜெனி புசார்ட் (கனடா), தாட்ஜனா மரியா (ஜெர்மனி), யானினா விக்மேயர் (பெல்ஜியம்), குவாங் வாங்க் (சீனா), ரெபக்கா பீட்டர்சன் (சுவீடன்), இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கர்மன் தண்டி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அமெரிக்க ஓபனில் அரைஇறுதி சுற்றை எட்டியவரான பிரான்சின் கரோலின் கார்சியா, பெல்ஜியத்தின் எலிசி மெர்டென்ஸ் ஆகியோர் நெருக்கடியான போட்டி அட்டவணை மற்றும் காயத்தால் விலகி விட்டனர்.

இதனால் போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ள அலிசன் ரிஸ்கேவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இவர் இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் அமிர்தராஜின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதல் சுற்றில் தரவரிசையில் 148-வது இடத்தில் உள்ள ரஷியாவின் அனஸ்டசியா கசனோவை எதிர்கொள்கிறார்.

காயம் மற்றும் ஆட்டத்திறன் பாதிப்பால் சறுக்கலை சந்தித்துள்ள 28 வயதான கனடா புயல் புசார்ட் 'வைல்டு கார்டு' சலுகை மூலம் சென்னை ஓபனில் பிரதான சுற்றில் ஆடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்த தொடரில் கவனத்தை ஈர்க்கும் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் புசார்ட் தனது சவாலை சுவிட்சர்லாந்தின் ஜோனி ஜூகெருடன் தொடங்குகிறார். இந்திய வீராங்கனைகள் அங்கிதா, கர்மன் தண்டி ஆகியோரை பொறுத்தவரை ஓரிரு ரவுண்டுகளை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும்.

ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் களம் காணுகின்றன. இரட்டையரில் இந்தியாவின் ஷர்மதா பாலு-ரியா பாட்டியா, அங்கிதா ரெய்னா- ரோசாலி வான்டெர் ஹோக் (நெதர்லாந்து) ஜோடி மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. காயம் காரணமாக இந்திய சாதனை மங்கை சானியா மிர்சா விளையாடவில்லை.

சென்னையில், வீரர்களுக்கான ஏ.டி.பி. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஏகோபித்த வரவேற்புடன் நீண்ட காலமாக நடந்து வந்தது. தெற்காசியாவில் நடத்தப்படும் ஒரே ஏ.டி.பி. தொடரான இது 2017-ம் ஆண்டுக்கு பிறகு மராட்டிய மாநிலம் புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மறுபடியும் சென்னைக்கு டென்னிஸ் திரும்புவது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.மாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாளில் புசார்ட்- ஜோனி ஜூகெர், இந்தியாவின் கர்மன் தண்டி- பிரான்சின் குளோ பாக்கிட் விக்மேயர்- குவாங் வாங் ஆகியோரது மோதல் குறிப்பிடத்தக்க ஆட்டங்களாக உள்ளன.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தினசரி டிக்கெட் விற்பனை அங்குள்ள கவுண்ட்டரில் விற்கப்படுகிறது. தினமும் மாலை 4 மணி முதல் வாங்கிக்கொள்ளலாம். ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.300, ரூ.450 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. chennaiopenwta.in என்ற இணையதளம் மூலமும் டிக்கெட் பெறலாம்.

மேலும் செய்திகள்