அல்காரஸ் ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஒலிம்பிக்கில் 3 தங்கப்பதக்கங்களை வெல்வார் - ஜோகோவிச்
|பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் தங்கப்பதக்கமும், அல்காரஸ் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
நியூயார்க்,
டென்னிஸ் ஜாம்பவானான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2008-ம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும் இந்த பாரீஸ் ஒலிம்பிக் தொடரில்தான் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசை தோற்கடித்து ஜோகோவிச் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பெடரர், நடால் போன்ற பல ஜாம்பவான்களுக்கு எதிராக அசத்திய ஜோகோவுச்சுக்கு, தற்சமயத்தில் கார்லஸ் அல்காரஸ் கடும் சவால் அளித்து வருகிறார். கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஓபன் டென்னிஸ் தொடர்களில் இருவரும் மாறி மாறி இறுதிப்போட்டியில் மோதி வருகின்றனர்.
இந்நிலையில் ஜோகோவிச் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'எனது ஒட்டுமொத்த டென்னிஸ் வாழ்க்கையில் ஒலிம்பிக் தங்கத்துக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். பல தோல்வி, பின்னடைவுகளை சந்தித்தாலும் ஒருநாள் தங்கப்பதக்கத்தை கையில் ஏந்துவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒலிம்பிக் இறுதிப்போட்டி முடிந்தவுடன் நான் அல்காரசிடம் சென்று, தங்கம் வெல்லும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி சொன்னேன். அல்காரஸ் ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஒலிம்பிக்கில் 3 தங்கப்பதக்கங்களை வெல்வார் என்று கருதுகிறேன்' என்று கூறினார்.