ஊக்கமருந்து குற்றத்திலிருந்து டென்னிஸ் வீராங்கனை தாரா மூர் விடுவிப்பு...!
|அவர் மீது விதிக்கப்பட்ட தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டன்,
டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான பிரிட்டனை சேர்ந்த தாரா மூர் ஊக்கமருந்து குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது விதிக்கப்பட்ட தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அவரிடம் இருந்து பெற்ற மாதிரியை சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக அவர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. அவரது மாதிரியில் நான்ட்ரோலோன் மற்றும் போல்டெனோன் இருந்ததாக சோதனையில் தெரியவந்தது. அந்த இரண்டும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன. மூர் இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு நிறுவனம் நடத்திய விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் மீது விதிக்கப்பட்ட தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு நிறுவனம் அறிவித்துள்ளது.