பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பயிற்சியை தொடங்கிய நடால்- உற்சாகத்தில் ரசிகர்கள்
|அமெரிக்க ஓபனின் 4-வது சுற்றில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நடால் எந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை.
பாரிஸ்,
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் வரும் 30 ஆம் தேதி பாரிஸில் தொடங்குகிறது. நவம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் பாரிஸ் மாஸ்டர்ஸில் பங்கேற்பதற்காக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) பாரிஸ் சென்றடைந்துள்ளார்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள நடால் அமெரிக்க ஓபனின் நான்காவது சுற்றில் பிரான்சிஸ் தியாஃபோவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தந்தையான பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் தொடராக பாரிஸ் மாஸ்டர்ஸ் அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக நடால் பாரிஸில் இன்று பயிற்சி மேற்கொண்டார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடால் கலந்து கொள்ளும் ஒற்றையர் பிரிவு என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.