டென்னிஸ்: தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழந்த ஜோகோவிச்...காரணம் என்ன..?
|காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிக்கனியை பறித்த நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான ஜோகோவிச் (செர்பியா) காலிறுதியில் கேஸ்பர் ரூட்டுடன் (நார்வே) இன்று விளையாட இருந்தார்.
இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியுள்ளார். நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு பட்டத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த ஜோகோவிச் காலிறுதிக்கு முன்பாக வெளியேறி விட்டதால், நம்பர் ஒன் இடத்தையும் இழக்கிறார். 2-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார்.